Ad Banner
Ad Banner
 பொது

மஹிமாவின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் தேசிய கோயில் கருத்தரங்கு

06/04/2026 04:32 PM

பத்துமலை, 06 ஏப்ரல் (பெர்னாமா) --  நாட்டில் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவது தொடர்பான விவகாரம், அண்மைய காலமாக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

விதிமுறைகளைப் பின்பற்றாமல் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது, நிர்வகிப்பு மற்றும் அதன் ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி எழும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டில் செயல்படும் வழிபாட்டுத் தலங்களின் மேம்பாடு மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த விரிவான புரிதலை ஆலய நிர்வாகத்தினருக்கு வழங்கும் நோக்கில் மலேசிய இந்து ஆலயம் - இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமா, தேசிய கோயில் கருத்தரங்கு ஒன்றை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது.

கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், CUMIG எனப்படும் மலாயாப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் மற்றும் டி.எஸ்.கே அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ''தேசிய நிலச் சட்டம், நகர, கிராம திட்டமிடல் சட்டத்தைப் புரிந்து கொள்ளுதல்; கோயில்களுக்கான நிலம்'' என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளதாக, மஹிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா கூறினார்.

''ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா அதிகாரப்பூர்வமாக இதனை தொடங்கி வைப்பார். கருத்தரங்கில் முதல் அங்கமாக மலேசியாவில் ஆலயங்களின் வகைகள் பற்றி பேசுவோம், பின்னர், தேசிய நிலச் சட்டம் குறித்து பேசுவோம். அதோடு, நகர திட்டமிடல் சட்டம் குறித்து கலந்துரையாடுவோம். இறுதியாக, சரியான முறையில் எவ்வாறு ஆலயத்தைக் கட்டுவது என்பது குறித்து ஒரு கட்டிடக்கலைஞர் விளக்குவார்''

நிலச் சட்ட நடைமுறைகள், குறிப்பாக தேசிய நிலச் சட்டம் குறித்த விவகாரங்களை ஆலய நிர்வாகம் ஆழமாக புரிந்து கொள்ள இக்கருத்தரங்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

இதனிடையே, நாட்டில் செயல்படும் இந்து ஆலய நிர்வாகங்களைச் சேர்ந்தவர்கள் இக்கருத்தரங்களில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

வரும் சனிக்கிழமை ஏப்ரல் 11-ஆம் தேதி, காலை 9 தொடங்கி மதியம் மணி 3 வரை பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் மண்டபத்தில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இன்று காலை பத்துமலை திருத்தல மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)