கோலாலம்பூர், 06 ஏப்ரல் (பெர்னாமா) -- வேலை ஒப்பந்தம் என்பது, முதலாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் இடையிலான உடன்படிக்கை மட்டுமல்ல.
மாறாக, மலேசியாவில், 1949-ஆம் ஆண்டு முத்திரைச் சட்டத்தின் கீழ், அதற்கு சட்டப்பூர்வத் தேவையும் உள்ளது.
முறையான முத்திரையிடல் இல்லாமல் வேலைக்கான இந்த ஒப்பந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.
இந்நிலையில், இச்சட்டம் எவ்வாறு செயல்படுகிறது? இது முதலாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது குறித்து விளக்கமளிக்கின்றார் தொழிலாளர் வழக்கறிஞர் வி.கே. ராஜ் கே. துரைராஜ்.
1949-ஆம் ஆண்டு முத்திரைச் சட்டத்தின் கீழ், மலேசியாவில் உள்ள பெரும்பாலான வேலை ஒப்பந்தங்கள், ஒரு பிரதிக்கு 10 ரிங்கிட் முத்திரைக் கட்டணம் விதிக்கப்படுகிறது.
முத்திரையிடப்படாத வேலை ஒப்பந்தம், முதலாளிக்கும் ஊழியருக்கும் இடையில் செல்லுபடியாகும் எனக் கருதப்பட்டாலும், அவர்களுக்கிடையே ஏதேனும் சிக்கல் நிலவும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அந்த ஆவணம் முத்திரையிடப்படும் வரையில், அதனை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என்று வி.கே. ராஜ் கே. துரைராஜ் கூறினார்.
''முத்திரையிடப்பட்ட வேலை ஒப்பந்தம் நீதிமன்றத்தில் செல்லுப்படியாகும். அது ஒரு செல்லுப்படியாகும் ஆவணமாக இருக்கும். முதலாளிக்கும் ஊழியருக்கும் இடையில் சிக்கல் ஏற்பட்டால், நீதிமன்ற வழக்கில் முத்திரையிடப்பட்ட ஆவணம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்,'' என்றார் அவர்.
இச்செயல்முறை நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் அதன் தாமதத்தைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும்.
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் முத்திரையிடப்படுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் விவரித்தார்.
அதேவேளையில், இம்முத்திரையிடல் இரு தரப்பினருக்கும் நன்மைப் பயக்கும் வகையிலேயே அமையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
''முத்திரையிட்டால் உள்நாட்டு வருமான வரி வாரியம் வரி செலுத்தப்பட்ட பணத்தை உறுதி செய்ய முடியும். இதன்வழி, முதலாளி, பணியாளர் என இரு தரப்பினரும் வரி பணத்தைச் செலுத்தினார்களா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். முதலாளிகள் அரசாங்கத்தை ஏமாற்ற நினைத்தால் அவ்வாரியம் அச்செயலைக் கண்டறிய முடியும்,'' என்றார் அவர்.
உள்நாட்டு வருமான வரி வாரியம், LHDN முகப்புகள் அல்லது அதன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திலும் இந்த ஒப்பந்த முத்திரையிடல் செயல்முறையை மேற்கொள்ளலாம்.
வேலை ஒப்பந்தம் முத்திரையிடப்படுவது சாதாரண ஒன்றாகத் தோன்றினாலும், அதற்கு குறிப்பிடத்தக்க சட்ட முக்கியத்துவம் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று வி.கே. ராஜ் வலியுறுத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]