Ad Banner
Ad Banner
 

ஏஐ-யை ஊக்குவித்து, ஆற்றல் துறையை முன்னிலைப்படுத்தும் ETCON26

06/04/2026 07:57 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 6, (பெர்னாமா) -- தெனாகா நேஷனல் நிறுவனம், டி.என்.பி ஏற்பாட்டிலான ETCon26 எனப்படும்  2026-ஆம் ஆண்டு எரிசக்தி மாற்ற மாநாடு, நிலையான மற்றும் திறன் வாய்ந்த ஆற்றல் எதிர்காலத்தை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு, ஏஐ முக்கிய மாற்ற சக்தியாக செயல்படுவதை முன்னிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதில் இருந்து,  ETCon26 ஆற்றல் சூழலமைப்பு முழுவதும் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முக்கிய தளமாக இருந்து வருவதாக டி.என்.பி தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ ஷம்சுல் அஹ்மாட் தெரிவித்தார்.

''ஆரம்பத்தில், 2023-ல் நாங்கள் தேசிய எரிசக்தி மாற்றத்திற்கான செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ​​முக்கியமாக வியூக முன்முயற்சிகளைப் பராமரித்து, அவற்றை விரிவுப்படுத்தினோம். ஜூன் மாதம் நடைபெறவுள்ள  ETCon26 மாநாட்டில், திட்டத்தைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். 

நாங்கள் உருவாக்க விரும்பும் கூட்டுச் செயல்பாட்டுச் சூழலின் மூலம், திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கும் தெளிவு, இனிவரும் காலங்களில் எரிசக்தி மாற்றத்தை இன்னும் திறமையாக அடைய எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்," என்றும் டத்தோ ஷம்சுல் கூறினார்.

மலேசியாவில் தரவு மையங்களின் வேகமான விரிவாக்கம் மின்சார தேவையை வேகமாக உயர்த்தி வருகிறது.

இது செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் வளர்ச்சியை ஆதரிக்க நம்பகமான மற்றும் திறம்பட செயல்படும் ஆற்றல் அமைப்பின் அவசர தேவையை வெளிப்படுத்துவதாக, பெர்னாமா தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ஷம்சுல் தெரிவித்தார்.

ஆற்றலுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான ஆழமான சார்பை இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு - ஆற்றல் மாற்றத்திற்கான ஒருங்கிணைப்பு” பிரதிபலிக்கிறது.

''மலேசியாவில் நாம் காணும் புதிய பிரிவு, வேகமாக வளர்ந்து வரும் தரவு மையத் துறையாகும். இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால்தான் நாங்கள் கூறுகிறோம்.

தரவு மையத் துறையை வளர்க்க, மிகவும் நம்பகமான ஆற்றல் துறை தேவை, அதைத்தான் நாங்கள் வழங்குகிறோம். மலேசியாவில் தரவு மையங்களின் வளர்ச்சியைச் சாத்தியமாக்கி, அவற்றுக்கு மிகவும் நம்பகமான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஆற்றல் கட்டணத்தை வழங்குகிறோம்,'' என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே டி.என்.பி-யின் செயல்பாடுகளை மாற்றியமைத்து வருவதாக கூறிய ஷம்சுல், முன்னறிவிப்பு பராமரிப்பு, மின்பரிமாற்ற நிர்வகிப்பு மற்றும் வானிலை கணிப்பு போன்ற துறைகளில், அது சிறந்த அமைப்புத் திட்டமிடல் மற்றும் அதிகரித்த மின்கட்டமைப்பு நிலைத்தன்மைக்கு வழிவகுப்பதாக குறிப்பிட்டார்.

''செயற்கை நுண்ணறிவின் அறிமுகத்தால், நிலையான மின் விநியோகத்தை உறுதிசெய்ய இந்த அமைப்பு தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்ளும். முன்கணிப்புகள், பராமரிப்பு மற்றும் செயல்திறன் கண்காணிப்பு ஆகிய அனைத்தும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படுகின்றன. 

இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது, பழுதுகளைக் குறைக்கிறது மற்றும் விநியோகத்தை நிலைப்படுத்துகிறது. காலப்போக்கில், இந்தத் திறன்கள் செயல்பாட்டுச் செலவு சேமிப்புகளாக மாறி, நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்கின்றன,'' என்று ஷம்சுல் சுட்டிக்காட்டினார்.

செயல்பாட்டு மேம்பாடுகளுக்கு அப்பால், எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கு அவசியமான புதிய திட்டங்கள் மற்றும் பங்குதாரர்களிடையே வலுவான கூட்டாண்மைகள் உள்ளிட்ட உறுதியான விளைவுகளை ETCon26 ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

''இது குறித்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒத்துழைப்பின் மூலம், மேலும் பல திட்டங்களும் உறுதியான முன்னெடுப்புகளும் செயல்படுத்தப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த முன்னெடுப்புகளின் மூலம் கிடைக்கும் பலன்கள் சமூகங்களுக்கும், பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும். உற்பத்தித்திறன் மேம்பாடுகள், செயல்திறன் ஆதாயங்கள் மற்றும் முழு சூழலமைப்பிலும் உகந்த தாக்கம் ஆகியவற்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

இது நாட்டை மேலும் போட்டித்தன்மை மிக்கதாக மாற்றும். இது, ஒரு ஆற்றல் மையமாக மாறும் நமது இலட்சியத்தை நனவாக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்க வழிவகுக்கும் மேலும் பல துறைகளை உருவாக்கவும் உதவும்,'' என்றும் ஷம்சுல் கூறினார்.

2026-ஆம் ஆண்டு எரிசக்தி மாற்ற மாநாடு, ஜூன் 3 முதல் 5 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும்.

கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைப் பிரதிநிதிகள், நிதியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பரந்த சமூகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)