Ad Banner
Ad Banner
 பொது

எரிசக்தி நெருக்கடி & மேற்காசிய மோதல்கள் குறித்த போலி தகவல்கள்; 42 விசாரணை அறிக்கைகள் திறப்பு

08/04/2026 06:32 PM

புத்ராஜெயா, ஏப்ரல் 08 (பெர்னாமா) -- இன்று பிற்பகல் மணி மூன்று நிலவரப்படி, சமூக ஊடகங்கள் மற்றும் இலக்கவியல் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் மேற்கு ஆசிய மோதல்கள் குறித்த போலியான தகவல்கள் தொடர்பில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், M-C-M-C 42 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.

அதில், 31 உள்ளடக்கங்கள் எரிபொருள் விலைகள் குறித்த போலிச் செய்திகளை உட்படுத்தி இருந்த வேளையில், விசாரணைக்கு உதவும் பொருட்டு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 22 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''அதேவேளையில், பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் இருந்து போலி உள்ளடக்கங்களை அகற்றுமாறு எம்.சி.எம்.சி இதுவரை 355 கோரிக்கைகளை விடுத்துள்ளது. இவற்றில், 154 உள்ளடக்கங்கள் தள வழங்குநர்களால் ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்ட வேளையில், எஞ்சியவை சம்பந்தப்பட்ட தளங்களால் இன்னும் விசாரணையில் உள்ளன,'' என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில், சமூக ஊடகங்களில், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான தகவல்கள் பரவுவது குறித்து மலேசியர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, உலகம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் தற்போதைய சூழ்நிலையில், உறுதி செய்யப்படாத தகவல்களைப் பரப்பி, தங்களின் மீதான கவனத்தையும் செல்வாக்கையும் பெறுவதற்கு சில தரப்பினர் முயற்சி செய்து வருவதாகவும் அவர் சாடினார்.

மலேசியர்களுக்கு டீசல் உள்ளிட்ட உதவித் தொகைகளை வழங்குவதற்காக MyKasih செயல்முறையையும் MyKad-ஐ பயன்படுத்தும் வழிமுறையை, நிதி அமைச்சு பரிசீலிக்கும் என்று தொடர்பு அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இதனிடையே, டீசல் தொடர்பாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்துப் பேசிய ஃபஹ்மி, உதவித் தொகைப் பெற்ற டீசலின் விலைக்கும் மீனவர்கள் பெறும் வருமானத்திற்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.

அவற்றைக் களைய, பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆராயும்படி விவசாயம், மற்றும் உணவு உத்தரவு அமைச்சையும் உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் அமைச்சையும், அமைச்சரவை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)