புத்ராஜெயா, ஏப்ரல் 09 (பெர்னாமா) -- இந்தியாவில், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை மணி 7 தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி மாலை மணி 6-க்கு வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் கேரளாவில் 140 தொகுதிகளில் சுமார் 2.7 கோடி பேரும், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் சுமார் 9.5 லட்சம் பேரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலை விடவும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி இம்முறை அதிக கவனம் ஈர்த்துள்ளது.
ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க முயலும் வேளையில், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பலமான வியூகம் அமைத்துள்ளது.
இதுதவிர, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் களமிறங்கியுள்ளதால், புதுச்சேரியில் பலமுனைப் போட்டி நிலவுகிறது
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, பிற்பகல் மணி மூன்று நிலவரப்படி புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 72 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
=== FLASH ===
தென்னிந்திய மாநிலமான கேரளாவில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி LDF மூன்றாவது முறையாக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யப் போராடுகிறது.
அவர்களுக்குப் போட்டியாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி UDF மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி களத்தில் உள்ளன.
இந்த தேர்தலில் மொத்தம் 890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிற்பகல் இரண்டு மணி நிலவரப்படி கேரளாவில் 140 தொகுதிகளை உட்படுத்தி 49.70 விழுக்காட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
==== FLASH ===
இதனிடையே, அசாமில் உள்ள 126 தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த இரண்டு முறைகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறது.
தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற பொதுமக்கள் காலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர்.
அசாமில் 126 தொகுதிகளை உட்படுத்தி 59.63 விழுக்காட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)