Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

சித்ரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது

10/04/2026 04:19 PM

ஈப்போ, ஏப்ரல் 10 (பெர்னாமா) -- பேராக், தெலுக் இந்தான், நகரத்தார் ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இவ்விழாவை முன்னிட்டு, அமைக்கப்படும் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் செய்யப்படாமல், வழக்கமான இடத்தில் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜூன் மாதம் தெலுக் இந்தான் சுற்றுலாத் தலமான மணிகூண்டு மற்றும் அதன் வளாகம் பெரிய அளவில் உருமாற்றம் அடைவதற்கான மேம்பாட்டு பணி தொடங்கப்படவுள்ளதால் திருவிழாவிற்கான தற்காலிக கடைகள் அமைக்கப்படும் இடத்தை மூட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக தெலுக் இந்தான் நகராண்மைக் கழகத் தலைவர் சைருள் அக்மால் காசிமிடம் பேச்சு வார்த்தை நடத்தி இந்த ஆண்டு வணிகர்கள் தற்காலிக கூடாரங்களை அதே இடத்தில் அமைக்க அனுமதியை பெற்றிருப்பதாக சிவநேசன் கூறினார்.

''பணிகள் தொடங்குவது ஜூன் மாதம். திருவிழா மே மாதம்தான். ஆனால், அடுத்த ஆண்டில் புதிய இடத்தில் கடைகளை அமைக்க இப்போதே நோட்டிஸ்கள் கொடுத்துவிட வேண்டும் என்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஒப்புதல் வழங்கிவிட்டார்,'' என்றார் அவர்.

இன்று பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலான சிறுகதைப் பட்டறையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, கடைகளைக் குத்தகைக்கு எடுப்பதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வுக் காணப்பட்டுள்ளதாக சிவநேசன் விளக்கினார்.

''இந்தக் கடைகளை எப்போதும் ஒன்பது பேர்தான் குத்தகைக்கு எடுக்கிறார்கள். அதில் ஒருவருக்குத்தான் கிடைக்கின்றது. மற்றவர்கள் புகார் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆக, அதனை இரண்டாகப் பிரித்து இரண்டு பேருக்கு, அதாவது இந்த ஆண்டு இரண்டு பேருக்கு, அடுத்த ஆண்டு இரண்டு பேருக்கு என்று முடிவு செய்யப்பட்டது. வாடகை எவ்வளவு என்று நாங்கள் முடிவு செய்துக் கொள்வோம் என்று நகராண்மைக் கழகத் தலைவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்,'' என்றார் அவர்.

எனவே, எதிர்வரும் மே முதலாம் தேதி கொண்டாடப்படவிருக்கும் சித்ரா பௌர்ணமி திருவிழா எந்தவொரு பிரச்சனைகளும் இன்றி சீராக நடைபெறும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)