Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

பினாங்கில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மாநில அரசாங்கத்தின் 24 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மானியம்

09/04/2026 05:24 PM

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 09 (பெர்னாமா) -- பினாங்கில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிக்கும் பொருட்டு இந்த ஆண்டும் மாநில அரசாங்கம் 24 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை வழங்கியுள்ளது.

பள்ளிகளில் வசதிகள் எப்போதும் சீராக இருப்பதை உறுதி செய்ய, அத்தொகையில் இருந்து ஏழு லட்சத்து 68 ஆயிரத்து 901 ரிங்கிட் நிதியை 28 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு வழங்கப்படுவதாக மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

மனித மூலதன மேம்பாட்டிற்கு தொடக்கக்கட்ட முதலீடாக ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 400 ரிங்கிட் தமிழ்ப்பள்ளிகளில் உள்ள 11 பாலர் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

அதே வேளையில், இலக்கவியல் கட்டமைப்பு மற்றும் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறை திறன்களின் மேம்பாட்டிற்காக பினாங்கு கல்வி மன்றம் PEC-க்கு 13 லட்சத்து 36 ஆயிரத்து 699 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சௌ கோன் இயோவ் அறிவித்தார்.

''மூன்று பஞ்சாபி கல்வி மையங்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டும் தெலுங்கு சங்கத்திற்கு முப்பதாயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது. கல்வித் துறையில் அனைவரையும் உட்படுத்திய தன்மையையும் சமூக நீதியையும் உறுதி செய்வதற்கு மாநில அரசாங்கத்தின் அர்ப்பணிப்பிற்கான சான்றாகும்,'' என்றார் அவர்.

பினாங்கு, ஜார்ஜ்டவுனில், நேற்று நடைபெற்ற நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியப் போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில், அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் இலவச மேசைகள் மற்றும் நாற்காலிகள் வழங்குவது உட்பட பல புதிய முயற்சிகள் இந்த ஒதுக்கீட்டின் வழி மேற்கொள்ளப்படும் என்று டத்தோ ஶ்ரீ எஸ்.சுந்தரராஜூ தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளிலும் வழிப்பாட்டு இடங்கள் அமைப்பதை பினாங்கு, தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழு இலக்காகக் கொண்டுள்ளதாகவும் நான்கு பள்ளிகள் ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வழங்கப்பட்டிருக்கும் நிதி அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்  ஐ.கிருஷ்ணன் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு இரண்டாவது துணை முதலமைச்சர் ஜக்திப் சிங் டியோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் கே.குமரன் மற்றும் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.குமரேசன் ஆகியோரும் வருகைப் புரிந்திருந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)