Ad Banner
Ad Banner
 பொது

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா; சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும்

11/04/2026 07:57 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 11 (பெர்னாமா) -- ம.இ.கா-வின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அதன் 140 தொகுதிகளில் ஒரே நேரத்தில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

கட்சியின் ஆண்டு விழாவாக மட்டுமில்லாமல், சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இந்நிகழ்ச்சிகள் அமையும் என்று அதன் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா தெரிவித்தார்.

"சிலருக்கு கட்சி இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாமல் எங்களைக் கேலி செய்பவர்களும் இருக்கிறார்கள். 80 ஆண்டு காலமாக இந்தக் கட்சி எவ்வளவு சேவை செய்திருக்கின்றது என்பதை அவர்கள் அனைவருக்கும் தெளிவுப்படுத்த இதனை நடத்துகிறோம். கட்சிக்குள் மட்டும் இந்நிகழ்ச்சிகளை நடத்தவில்லை. வெளி மக்களையும் அழைத்துதான் நடத்துகிறோம்," என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ முருகையா அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மருத்துவ முகாம், விளையாட்டுப் போட்டிகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, குடும்ப தின விழா, ஓட்டப்பந்தய போட்டி, மக்களுடனான சிறப்பு சந்திப்பு கூட்டம்,மாநில அளவிலான விருந்து நிகழ்ச்சிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று முருகையா கூறினார்.

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)