கோத்தா கினபாலு, ஏப்ரல் 11 (பெர்னாமா) -- உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து எரிபொருள் கசிவு ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்காக பெட்ரோல் நிலையங்களில் போலீசாரைப் பணியில் அமர்த்தும் பரிந்துரைக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு கே.பி.டி.என்-இன் அமலாக்க அதிகாரிகள் பெட்ரோல் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில்,
அதனை விரிவுப்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட இப்பரிந்துரைக்கு, ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ அர்மிசான் அலி தெரிவித்தார்.
"முன்னதாக கே.பி.டி.என்-ஐ மட்டும் உட்படுத்தி, பின்னர் போலீஸ் பணியாளர்களின் கூடுதல் உதவியுடன் விரிவாக்கப்பட்ட இந்த அமலாக்க அதிகாரிகளின் பணியமர்த்தலை விரிவுபடுத்துவது தொடர்பில் ஜே.டி.பி.ஏ.பி ஒரு பரிந்துரையைச் சமர்ப்பித்த நிலையில், அப்பரிந்துரை இறுதியில் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது," என்றார்.
கே.பி.டி.என் அமலாக்கப் பிரிவுகளில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நாடு முழுவதும் பொருள்களின் விநியோக நிலை, விலைகள் ஆகியவற்றை மேலும் விரிவாகக் கண்காணிக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டே போலீசாரின் உதவி நாடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
அதில் முதல் கட்டமாக, மார்ச் 20 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பெட்ரோல் நிலையங்களில் KPDN அமலாக்க அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் தொடங்கும் இரண்டாம் கட்டத்தில், போலீஸ் பணியாளர்களை உட்படுத்தி மேலும் 70 நிலையங்களில் பாதுகாப்பு கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ அர்மிசான் தெரிவித்தார்.
இன்று சபா, கோத்தா கினபாலுவில் உள்ள Dapur Kita-Kita Jetsin நிறுவனத்தைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)