கோலாலம்பூர், ஏப்ரல் 18 (பெர்னாமா) -- பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்ந்து 300 லிட்டர் RON95 பெட்ரோல் ஒதுக்கீட்டை பெறுவதற்காக சிறப்பு விலக்கு வழங்க வேண்டும் என்ற ஊடக சங்கத்தின் பரிந்துரையை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு MTEN கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு தாம் தயாராக உள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
தற்போதைக்கு 200 லிட்டர் அளவில் வழங்கப்பட்டு வரும் தற்காலிக ஒதுக்கீட்டிற்கு மாறாக, ஊடகப் பணியாளர்கள் மாதத்திற்கு 300 லிட்டர் ஒதுக்கீட்டைத் தொடர்ந்து பெறுவதற்கான விண்ணப்பம் அப்பரிந்துரையில் அடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் சுகாதாரம் குறித்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக விளங்கும் 'Tiga Serangkai' நோய் தடுப்புத் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
ஊடகப் பணியாளர்கள் முன்னர் பெற்று வந்ததைப் போலவே 300 லிட்டர் RON95 பெட்ரோல் ஒதுக்கீட்டைத் தொடர்ந்து பெறுவதற்குச் சிறப்பு விலக்கு அளிக்குமாறு, மலேசிய ஊடக மன்றங்களுக்கான சங்கம் GKMM, நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தது.
மாதத்திற்கு 200 லிட்டராக மாற்றியமைக்கும் நடவடிக்கை, பத்திரிகையாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை உள்ளடக்கிய ஊடகப் பணியாளர்கள் களத்தில், தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் சவாலை சந்தித்து வருவதாக GKMM அக்கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)