கோலாலம்பூர், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- “Huayan The Pureland Learning Centre” என்ற முகநூல் கணக்கின் உரிமையாளர் அல்லது நிர்வாகி குறித்த விசாரணையை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் மேற்கொண்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கில், சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதிக்கும் வகையிலான புகைப்படம் ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஏப்ரல் 25-ஆம் தேதி, தகவல் அனுப்பப் பயன்படுத்தப்பட்ட சாதனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
இவ்விவகாரம் குறித்து இதுவரை 21 புகார்களைத் தங்கள் தரப்பு பெற்றுள்ளதாகவும், விசாரணைக்கு உதவும் நோக்கில் புகார் அளிக்க முன்வந்த நபர்கள் உட்பட 21 சாட்சிகள் தங்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் கூறினார்.
1948-ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் செக்ஷன் 4(1), குற்றவியல் சட்டம் செக்ஷன் 504, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233 ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக டத்தோ குமார் தெரிவித்தார்.
சட்டவிரோத நோக்கங்களுக்காக சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தும் எந்தவொரு தரப்பினர் மீதும், குறிப்பாக 3R எனப்படும் மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமார் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]