அலோர் காஜா, 21 ஏப்ரல் ((பெர்னாமா) -- ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், இன்று தொடங்கி நான்கு நாள்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
53 வயது அந்த ஆடவருக்கான தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் தியோ ஷு யீ இன்று மலாக்கா அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிறப்பித்தார்.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 42 (1) மற்றும் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 15(1) (ஏ) ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் மணி 12.10-க்கு அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவில் சரணடைந்ததைத் தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டார்.
பேராக் ஈப்போவிலிருந்து ஜோகூர் பாருவுக்குப் பயணித்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
பாதுகாப்பற்ற முறையிலும் முழு கவனமின்றியும் பேருந்தை ஓட்டும் 20 வினாடிகள் கொண்ட காணொளிப் பதிவு, ஏப்ரல் 16-ஆம் தேதி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)