கோலாலம்பூர், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- 2048-ஆம் ஆண்டில் முதியோர் நாடாக அல்லது 2036-ஆம் ஆண்டில் முதுமையடையும் நாடாக மலேசியா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், நாட்டில் உள்ள மூத்த குடிமக்களின் நிலை குறித்த அதிர்ச்சியான தகவல்களை, அண்மையில் சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்தது.
சுமார் 68 விழுக்காட்டு முதியவர்கள் பல நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டும் அந்த தகவல்கள் பெரும் கவலையை அளிப்பதாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு & கல்வி பிரிவு அதிகாரி என்.வி சுப்பாராவ் கூறினார்.
முதியவர்களில் 39 விழுக்காட்டினர் நீரிழிவு நோயாலும், 73 விழுக்காட்டினருக்கு உயர் ரத்த அழுத்தம், 76 விழுக்காட்டினருக்கு அதிக கொழுப்பு என சுமார் 68 விழுக்காடு முதியவர்கள் இதில் குறைந்தது இரண்டு நோய்களைக் கொண்டிருப்பதாக, என்.வி சுப்பாராவ் கூறினார்.
அதோடு, 30.6 விழுக்காடு முதியவர்கள் உடல் உழைப்பற்றவர்களாகவும், 12.8 விழுக்காட்டினர் நடக்க முடியாமல் இருக்கும் நிலையில், 60 விழுக்காட்டினர் தளர்ச்சி அடையும் அபாயத்தில் இருப்பதாகவும், 11 விழுக்காட்டினர் ஏற்கனவே தளர்ச்சி அடைந்தவர்கள் என்று அவர் விவரித்தார்.
இதனிடையே, மலேசியா விரைவான மக்கள்தொகை முதுமையடைதலை சந்தித்து வருவதை இந்த புள்ளி விவரம் காட்டுவதாக சுப்பாராவ் கூறினார்.
எனவே, முதியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை இன்றைய தலைமுறையினர் கையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
''முதியோர்களை அப்படியே விட்டு விடாமல் அவர்களது அரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்து வேண்டிய தருணத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் இருக்கின்றார்கள்'', என்றார் அவர்.
வயதைக் காரணம் காட்டி முதியவர்களை ஒரு மூளையில் ஒதுக்கி வைப்பதைத் தவிர்த்து, உற்சாகமூட்டக்கூடிய நிகழ்ச்சிகளை அவர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்று சுப்பாராவ் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)