காஞ்சனா புரி, மே 03 (பெர்னாமா) -- இரண்டாம் உலகப் போரின்போது சயாம்–பர்மா இரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களின் நினைவாக தாய்லாந்து மண்ணில் ‘நடுகல்’ ஒன்று நிறுவப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா, தொழிலாளர் தினத்தன்று, தாய்லாந்தின் காஞ்சனா புரி எனும் இடத்தில் அனுசரிக்கப்பட்டது.
இவ்விழாவின் சிறப்பு அம்சமாக, அக்காலக்கட்டத்தில் தொழிலாளர்களாய் சென்று உயிர்நீத்த மூத்த சந்ததியினரை நினைவுக் கூறும் வகையில் சிறப்பு பாடல் ஒன்றும் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டுள்ளது.
சயாம்–பர்மா இரயில்பாதை அமைக்கும் பணி தமிழர்களின் வரலாற்றில் இரத்த சரித்திரமாகும்.
”romusha” என்று அழைக்கப்படும் அவர்களின் துயர நிலையைப் பற்றிய வரலாறுகளும் கதைகளும் உலக மக்களிடையே சென்றடைய வேண்டும் என்ற முயற்சியில், இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக பேங்காக்கில் உள்ள மலேசியர்கள் மற்றும் இந்தியர்கள், MIB அமைப்பின் இயக்குநரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளருமான முனைவர் செல்வகுமார் பெருமாள் தெரிவித்தார்.
WE WILL REMEMBER YOU ROMUSHA என்ற இப்பாடல் தொழிலாளர்களின் துயரத்தையும், அவர்கள் காட்டிய மன உறுதியையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்நிகழ்ச்சியில் தாய்லாந்திற்கான மலேசிய தூதர் வான் சைடி வான் அப்துல்லா, தாய்லாந்திற்கான இலங்கை தூதர் விஜயந்தி எதிரிசிங்கே, காஞ்சனாபுரி ஆளுநர் வாரிதா சங்குவான்செர்ம்ஸ்ரி, மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆலோசகர் ஆர்.முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதோடு, அந்நாட்டு அதிகாரிகள், மலேசியர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக டாக்டர் செல்வகுமார் கூறினார்.
''இந்திய சமுதாயத்தினரிடமிருந்து ஆதரவு இருக்கிறது. இன்னும் எதிர்பார்க்கிறோம். சிலர் சமூக ஊடகத்தில் கிடைத்ததை வைத்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு பல ஏற்பாடுகளையும் செய்துக் கொடுத்திருந்தோம்,'' என்றார் அவர்.
இந்த நிறைவு விழாவை ஒவ்வோர் ஆண்டும் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த அவர், இந்திய மக்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)