ஜார்ஜ்டவுன், மே 03 (பெர்னாமா) -- தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருவேப்பிலையின் விலை அதிகரிப்பு இல்லத்தரசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதற்கு கருவேப்பிலையை, வீட்டிலேயே வளர்த்து சமையலுக்கு பயன்படுத்துமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
கருவேப்பிலை விலை அதிகரித்து வருவதாக இல்லத்தரசிகள் குறைப்பட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கடைகளுக்குச் சென்று கண்ணோட்டம் மேற்கொண்டது.
இதன்வழி, சந்தைகளில் ஒரு கிலோ கருவேப்பிலைக்கு 14 ரிங்கிட் முதல் 18 ரிங்கிட் வரை பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஆய்வு & கல்வி பிரிவு அதிகாரி என்.வி சுப்பாராவ் கூறினார்.
எனவே, எளிதில் பயிரிடக்கூடிய கருவேப்பிலையை வீட்டிலேயே பயிரிட்டு வளர்ப்பதன் வழி, மக்கள் செலவை மீதப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருவேப்பிலை உட்பட காய்கறிகள் மற்றும் மூலிகைகளை வளர்ப்பது சிக்கனமானது மட்டுமல்ல, இரசாயனங்கள் பயன்படுத்தப்படாததால் பாதுகாப்பானது என்றும் சுப்பாராவ் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)