Ad Banner
 விளையாட்டு

2026 ஊபர் கிண்ணம்; மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்

21/04/2026 05:04 PM

ஹெர்னிங், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு ஊபர் கிண்ண பூப்பந்து போட்டியின் சவாலை எதிர்கொள்ள மலேசிய வீராங்கனைகள் தயாராக உள்ளனர்.

ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கி மே 3-ஆம் தேதி வரை, டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் இப்போட்டியில் தேசிய விளையாட்டாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று தேசிய மகளிர் அணிக்குத் தலைமையேற்றிருக்கும்  எம்.தினா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இம்முறை தமது சகாவான பெர்லி தானுடன் ஜோடி சேரவில்லை என்றாலும், தேசிய அணியின் பலம் பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

மாறாக இம்முறை தேசிய அணியில் திறமையான பல இளம் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

''பெர்லி தான் அணியுடன் இங்கு இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எல்லோரும் அவர் விளையாட வேண்டும் என்றும், அவரும் இங்கு விளையாட விரும்புகிறார் என்றும் நான் நினைக்கிறேன்,'' என்று அவர் கூறினார்.

டென்மார்க், ஹெர்னிங்கில் நடைபெறும் பயிற்சி தற்போது  சுமுகமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பெர்லிக்கு பதிலாகத் தேசிய இளம் வீராங்கனை சோங் ஜி யூ  அனைத்துலக அரங்கில் தமது திறமைகளை நிரூபிக்க ஆர்வமாக உள்ளார்.

பி குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய மகளிர் அணி, ஜப்பான், துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)