புத்ராஜெயா, ஏப்ரல் 24 (பெர்னாமா) -- நாட்டிலுள்ள இந்திய சமூகத்தை உட்படுத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு கழகங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில்...
அண்மையில், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டமான 'முட்ரா'வின் (MUDRA) கீழ் 22 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கி இருப்பதாக அறிவித்தது.
சம்பந்தப்பட்ட அந்த நிதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, அதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்து மக்களுக்கு இலகுவாக விவரிக்கும் வகையில் இந்தியப் பிரதிநிதிகள் சிலர் இன்று அமைச்சுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இந்திய சமூகத்தினரிடையே உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 2025இல் 16 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்த வேளையில், இவ்வாண்டு அது 22 கோடி ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது, இந்திய வணிகர்கள் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் அக்கறையைப் புலப்படுத்துவதாக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள்குமார் தெரிவித்தார்.
"இந்த வாய்ப்பினை இந்திய சமூகத்தினர் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர வணிகர்கள் நன்முறையில் பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்பதே எங்களின் ஆவலாகும். நிதி தொடர்பிலான விவகாரம் என்பதால், போலி தகவல்களை நம்பி ஏமாறாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
எனவே, இந்நிதியைப் பெறுவதற்கு மூன்றாம் தரப்பினரின் உதவியை யாரும் நாட வேண்டாம் என்று நீலாய் சட்டமன்ற உறுப்பினருமாகிய அருள்குமார் கேட்டுக் கொண்டார்.
இந்திய வியாபாரிகளுக்கான பல்வேறு அனுகூலங்களை அரசாங்கம் ஆண்டுதோறும் அறிவித்து வந்தாலும், அவை இந்தியர்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது.
இன்றையச் சந்திப்புக் கூட்டம் அதற்கான புதிய மாற்றமாக அமையும் என்று அமைச்சின் முன்னாள் துணையமைச்சருமான செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இயக்கங்களைப் போல கூட்டுறவுக் கழகங்களிலும் அதிகமான வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மீதும் இந்திய சமுதாயம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பழனிசாமி தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் 15-க்கும் மேற்பட்ட இந்திய பிரநிதிகள் கலந்து தெளிவான விளக்கம் பெற்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)