Ad Banner
 பொது

ஊடகத் துறையின் மீள்திறனை வலுப்படுத்த முதற்கட்டமாக ஒரு கோடியே 23 லட்சம் ரிங்கிட் நிதி

27/04/2026 06:04 PM

ஜாலான் சுல்தான் இஸ்மாயில், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- தங்களின் இலக்கவியல் உருமாற்றத்தை மேம்படுத்தும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 34 ஊடக நிறுவனங்கள், ஊடகப் புத்தாக்க நிதியின் கீழ், முதல் கட்டமாக ஒரு கோடியே 23 லட்சத்து 80,000 ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றுள்ளன.

வேகமாக மாறிவரும் இலக்கவியல் சூழலுக்கு மத்தியில், உள்ளூர் ஊடகத் துறையின் மீள்திறனை வலுப்படுத்தும் நோக்கில், இவ்வாண்டு தொடர்பு அமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ள மூன்று கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இந்நிதி வழங்கப்படுவதாக, துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார். 

ஊடகப் பணியாளர்களுக்கான பயிற்சி, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், உள்கட்டமைப்பு ஆதரவு, உட்பட உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளை உள்ளடக்கி, ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 300,000 ரிங்கிட் வரையிலான நிதியுதவி வழங்கப்படலாம் என்று தியோ நி சிங் கூறினார்.

''பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திறக்கப்பட்ட தொடர்ச்சியான விண்ணப்பங்கள் மூலம் இரண்டாம் கட்டம் முதல் நான்காம் கட்டம் (2 - 4) செயல்படுத்தப்பட்டு, தற்போது ஒப்புதல் செயற்குழுவின் பரிசீலனை நிலையில் உள்ளது. ஊடகப் புத்தாக்க நிதிக்கான ஐந்தாம் கட்டம், வரும் மே முதலாம் தேதியிலிருந்து 14-ஆம் தேதி வரை திறக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், மலேசியாவில் இதுவரை விண்ணப்பிக்காத ஊடக நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றன,'' என்றார் அவர். 

இன்று கோலாலம்பூரில் 21-வது ஆசியான் ஊடகவியலாளர் கூட்டமைப்பின் பொதுபேரவையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]