Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

டீசல் முறைகேடு; லாரி ஓட்டுநர் கைது, 1,500 லிட்டர் டீசல் பறிமுதல்

29/04/2026 02:41 PM

கோலாலம்பூர், 29 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலாலம்பூர் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என், லாரி ஓட்டுநர் ஒருவரைக் கைது செய்ததோடு, முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 1,500 லிட்டர் டீசலையும் பறிமுதல் செய்துள்ளது.

செல்லுபடியாகும் உரிமம் அல்லது அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருளைக் கையாண்ட குற்றத்திற்காக, 35 வயதான அந்நபர் நேற்று பின்னிரவு மணி 1 அளவில், சுங்கை பிசியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், 1961-ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டம், செக்‌ஷன் 21-இன் கீழ் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் கே.பி.டி.என் இயக்குநர், முஹமட் சப்ரி செமான் தெரிவித்தார்.

மேலும், 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று கூடுதல் கலன்கள் பொருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டிருந்த ஒரு லாரியையும் தமது தரப்பு கைப்பற்றியதாக அவர் கூறினார்.

''எங்கள் விசாரணையின் அடிப்படையில், அவர் சிரம்பானைச் சேர்ந்தவர். இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர், சிரம்பானில் மூன்று அல்லது நான்கு பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளை நிரப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவர் சிரம்பானுக்குத் திரும்புவார் என்றும் அறியப்பட்டது,'' என்றார் அவர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 51,500 ரிங்கிட் ஆகும்.

மேலும், அந்த 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கலன்கள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தால், அரசாங்க உதவித் தொகையின் இழப்பு 11,880 ரிங்கிட்டை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)