புக்கிட் ஜாலில், 01 மே (பெர்னாமா) -- இந்நாட்டில் தொழிலாளர்களின் சராசரி மாதச் சம்பளத்தை மாதத்திற்கு 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவதையும், ஊழியர் ஊதியம் 2030-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விடுக்காட்டை எட்டுவதையும் அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும் ஆற்றல்மிக்க, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நிலையான வேலை வாய்ப்புச் சூழலை உருவாக்குவதற்காக, 13-வது மலேசியத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
''அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவதே எங்கள் பணியாகும். இந்த ஒப்பந்தத்தில், இலாபங்கள் ஒரு தரப்பில் குவியவோ அல்லது தேக்கமடையவோ அனுமதித்து, அதே சமயம் இடர்பாடுகளை மிகவும் நலிந்தவர்கள் மீது சுமத்தும் பழைய முறையை நாங்கள் நிராகரிக்கிறோம்,'' என்றார் அவர்.
தொழிலாளர்கள் எப்போதும் போட்டித்திறனுடனும் உற்பத்தித்திறனுடனும் இருப்பதை உறுதி செய்வதற்காக, தமது அமைச்சு மனிதவள மேம்பாட்டுக் கழகம், திறன் மேம்பாட்டு நிதிக் கழகம் மற்றும் Talent Corp போன்ற நிறுவனங்களுடன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
வேலைவாய்ப்புத் துறையை வலுப்பெறச்செய்யவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப அது செயல்பட உறுதி செய்வதற்கும் மேம்படுத்தப்படக்கூடிய பல சட்ட விதிகளை மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருவதாக ரமணன் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]