Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தெலுக் இந்தானில் கோலாகல சித்ரா பௌர்ணமி

01/05/2026 07:10 PM

தெலுக் இந்தான், ஏப்ரல் 30 (பெர்னாமா) -- நாழு தழுவிய அளவிலான முருகன் திருத்தலங்களில் இன்று சித்ரா பௌர்ணமி விமரிசையாக கொண்டாடப்பட்டாலும் தெலுக் இந்தானில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயமே இவ்விழாவிற்கு பிரசித்திப் பெற்றது.

நூற்றாண்டுக்கும் மேலாக பழைமை வாய்ந்த இவ்வாலயத்தில் பாரம்பரியம் மாறாமல் இன்று கொண்டாடப்படும் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் நாடு தழுவிய அளவிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று அதிகாலை மணி 4.30-க்கு பக்தர்கள் தங்களின் பால்குட காணிக்கையை செலுத்தத் தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து காலை மணி 7.00 வரை ஸ்ரீ தண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

பாலாபிஷேகம் முடிந்து, காலை மணி 7.30-க்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காவடிகளும் எடுக்கப்பட்டன.

நண்பகல் மணி 12.01-க்கு மகேஸ்வர பூஜையை அடுத்து, பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனிடையே, தெலுக் இந்தான் சித்திரா பௌணர்மி திருவிழாவில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள் வரும் காலத்தில் இடமாற்றம் காணப்படும் என்று விழாவில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்ட பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

"எதிர்வரும் ஜூன் மாதம் தெலுக் இந்தான் சுற்றுலாத் தலமான (சாய்ந்த கோபுரம்) மணிகூண்டு மற்றும் அதன் வளாகம் பெரிய அளவில் உருமாற்றம் அடைவதற்கான மேம்பாட்டு பணி தொடங்கப்படவுள்ளதால் தற்காலிக கடைகள் அமைக்கப்படும் இடத்தை மூட திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிக வணிகக் கூடாரங்கள் பழைய இடத்திலிருந்து அங்குள்ள (OCBC) ஜாலான் மக்கோத்தாவுக்கு மாற்றப்படும்," என்றார் அவர்.
 
கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் வரையில் ஊராட்சி மன்றம் நிர்ணயித்திருக்கும் புதிய இடத்தில் வியாபாரிகள் தங்களின் வணிகங்களைத் தொடரலாம் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]