Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

புஞ்சாக் ஆலம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உடல் மீடபு

30/04/2026 05:35 PM

புஞ்சாக் ஆலம், ஏப்ரல் 30 (பெர்னாமா) -- சிலாங்கூர், பண்டார் புஞ்சாக் ஆலமில் உள்ள கால்வாயில் விழுந்ததாக நம்பப்படும் காணாமல் போன பத்து வயது சிறுவன், மூன்று நாள்கள் மேற்கொள்ளப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குப் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டான்.

கைரில் இசானி கைசாலுலினுடின் என்ற அச்சிறுவன் விழுந்ததாகக் கூறப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்கை பூலோவில், பிற்பகல் மணி ஒன்று அளவில், அவனின் உடல் மிதந்த நிலையில் உறுப்பினர்களால் கண்டெடுக்கப்பட்டது.

சிறுவனை மீட்கும் தேடல் நடவடிக்கையில் நீர் மீட்புக் குழுப் பிரிவு, மோப்பநாய்ப் பிரிவு, போலீசார், மலேசிய பொது பாதுகாப்புப் படை, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை மற்றும் இன்னும் பல தரப்பினர் ஒத்துழைப்பு நல்கியதாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, J-B-P-M-மின் சிலாங்கூர் மாநில நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

சிறுவனைத் தேடும் நடவடிக்கை முழுவதும், மீட்புப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் மேற்பரப்புத் தேடல் மற்றும் முக்குளிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

மேல் நடவடிக்கைக்காக சிறுவனின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏப்ரல் 28ஆம் தேதி பிற்பகல் மணி 3.30 அளவில், பெய்த கனமழையின் போது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில், அச்சிறுவன் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)