கோலாலம்பூர், மே 02 (பெர்னாமா) -- ரிங்கிட் தொடர்ச்சியாக வலுவடைவதும், அனைத்துலக நாணய நிதியம், IMF-இன் பொருளாதாரக் கணிப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படை வலிமையையும், மலேசிய மடானி நிர்வாகத்தின் இயக்க திசை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.
இவ்வளர்ச்சி, ஆசிய வட்டாரத்தில், மலேசியா ஒரு நம்பகமான பொருளாதார மற்றும் முதலீட்டு மையமாக மீண்டும் எழுச்சி பெற்று வருவதை குறிப்பதாக நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் முஹ்மட் கமில் அப்துல் முனிம் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு ஏப்ரல் இறுதி வரையில், அமெரிக்க டாலருக்கு எதிராக சுமார் 2.64 விழுக்காடு அதிகரிப்பை ரிங்கிட் பதிவுசெய்தது.
இதன்மூலம், ஆசிய நாணயச் செயல்திறனில் மலேசியா முதலிடத்தைப் பிடித்ததோடு, சீனா மற்றும் சிங்கப்பூர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக CNBC இந்தோனேசியா கூறியதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஹ்மட் கமில் தெரிவித்தார்.
இன்றைய ரிங்கிட்டின் வலிமை தற்செயலானது அல்ல, மாறாக நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சி, சாதகமான வெளிநாட்டு முதலீட்டு வரவுகள், அரசியல் நிலைத்தன்மை, தெளிவான பொருளாதார சீர்திருத்தங்கள், அரசாங்கம் மற்றும் பேங்க் நெகாரா மலேசியாவின் கொள்கைகள் மீதான அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கை போன்ற காரணங்களாலும் வலுப்பெற்றுள்ளதாக அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)