Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இணைய மோசடிக் கும்பல்களின் நடவடிக்கைகள் முறியடிப்பு

05/05/2026 05:22 PM

கோலாலம்பூர், 05 மே (பெர்னாமா) -- கடந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்களைக் குறிவைத்து செயல்பட்டு வந்த இரண்டு இணைய மோசடிக் கும்பல்களின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன.
 
ஏப்ரல் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின் வழியாக மாக்காவ் ஸ்கெம்மில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் உள்நாட்டினர், தைவான், பாகிஸ்தான் மற்றும் இந்தியப் பிரஜைகள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.கே இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.

அக்கும்பல், இந்திய அமலாக்க அதிகாரிகளைப் போல் வேடமிட்டு, பாதிக்கப்பட்டவர் தேசத்துரோக உள்ளடக்கத்தைப் பரப்பும் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறும் செயல்முறையைப் பயன்படுத்தியதாக டத்தோ ருஸ்டி கூறினார்.

அக்கும்பல் 'இன்ஸ்பெக்டர் சுனில் குமார்' என்ற பெயர் பொறிக்கப்பட்ட 'டெல்லி போலீஸ்' சீருடைகளையும் அணிந்திருந்தது, மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட நாட்டில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதற்காக, சந்தேக நபர்கள் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளும்போது அந்த ஆடைகளைப் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மறுநாள் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், அமெரிக்கக் குடிமக்களைக் குறிவைத்து 'காதல் மோசடி' நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் மலேசியா, சீனா, மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டதாக ருஸ்டி தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 420 மற்றும் 1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம், செக்‌ஷன் 6(1)(c)-யின் கீழ் அவ்விரு வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]