கிள்ளான், 17 மே (பெர்னாமா) -- இரு வரிகளில் வாழ்க்கைப் பாடத்தை கற்பிக்கும் வல்லமைக் கொண்ட திருக்குறளின் மகத்துவத்தை, இன்றைய இளம் பிள்ளைகளிடம் எடுத்துரைக்கும் வண்ணம், மலேசிய இந்திய இளைஞர் மன்றம், MIYC, தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் போட்டியை முதன்முறையாக ஏற்று நடத்தியது.
திருவள்ளுவப் பெருந்தகையின் 'உலகப் பொதுமறையான' திருக்குறளை மனனம் செய்து ஒப்புவிக்கும் வழக்கமான போட்டியாக இல்லாமல், அதன் அர்த்தங்களை புரிந்து, அதிலுள்ள திறவுச் சொற்களை அறிந்து, objective எனப்படும் தேர்வு கேள்விகளுக்கு விடையளிப்பதே, இப்போட்டியின் தனிபாணியாக இருந்தது.
திறவுச் சொற்கள் வழி பதில் எனும் காரணத்தால், அதிகமான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் திருக்குறளை கற்க தொடங்கியதோடு இப்போட்டியிலும் பங்கேற்றதாக அதன் இயக்குநர் சசிதரன் பரமசிவம் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 28-ஆம் தேதி, எட்டு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில், கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றதாக சசிதரன் கூறினார்.
சிலாங்கூர், கிள்ளானில் இன்று நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவின்போது, மலேசிய சாதனை புத்தகத்தால் இப்போட்டிக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக MIYC-இன் துணைச் செயலாளருமான சசிதரன் குறிப்பிட்டார்.
இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.
MINDAPPZ E TUITION நிறுவனத்தின் இணை ஏற்பாட்டில், நேற்று நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவில் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]