புத்ராஜெயா, மே 06 (பெர்னாமா) -- மெட்ரிகுலேஷனில் சுமார் 2000 இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றக் கோரிக்கையை கல்வி அமைச்சிடம் மஇகா கல்விக்குழு முன்வைத்துள்ளது.
அதே வேளையில், எஸ்.பி.எம் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏக்கள் பெற்று நன்னெறிக் கல்வியில் மட்டும் பி மதிப்பெண் பெற்ற, மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக மஇகா கல்விக்குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்றும், மெட்ரிகுலேஷனில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு உதவ மஇகா கல்விக்குழு தயாராக இருப்பதாக டத்தோ நெல்சன் தெரிவித்தார்.
இன்று புத்ராஜெயாவில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கை மஇகா கல்விக்குழு நேரடியாகச் சந்தித்து பல கோரிக்கைகளை முன் வைத்தப் பின்னர் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, இடைநிலைப்பள்ளிகளில் தாய்மொழி பாடத்தை பயிலும் POL வகுப்புகள், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, ஊதியம் அதிகரிப்பு, டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி துறையில் மாணவர்களுக்கான வாய்ப்பு உட்பட இன்னும் பல கோரிக்கைகளை முன் வைத்ததாக மஇகா தொடர்பு பிரிவு தலைவர் சிவசுப்ரமணியம் லட்சுமணன் தெரிவித்தார்.
மஇகா கல்விக்குழுவுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள ஃபட்லினா சிடேக் உறுதியளித்தாகவும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)