சிப்பாங், 07 மே (பெர்னாமா) -- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வணிக நோக்கங்களுக்காக சமூக ஊடகச் செயலி மூலம் அநாகரிகமான மற்றும் ஆபாசமான காணொளிகளை அனுப்பியக் குற்றத்தை ஒப்புக்கொண்ட பலகார வியாபாரி ஒருவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிபதி அஹ்மட் ஃபுவாட் ஒத்மான் குற்றஞ்சாட்டப்பட்ட பிரான்லி முகமது தஹார் என்பவருக்கு இந்தத் தண்டனையை விதித்ததோடு, அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதச் சிறைத் தண்டனையையும் விதித்தார்.
2024ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி, இரவு மணி 8.44க்கு, "பேபி சேனல் லைஃப்டைம்" என்ற ஒரு டெலிகிராம் கணக்கைப் பயன்படுத்தி, டெலிகிராம் குழுவிற்கான அணுகல் வழி, வணிக நோக்கங்களுக்காக எம்சிஎம்சி வேடமிட்ட முகவருக்குத் தெரிந்தே ஆபாசமான தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
ஒரு டெலிகிராம் கணக்கு மூலம், எம்சிஎம்சி வேடமிட்ட முகவர் ஒருவருக்கு அந்த உள்ளடக்கத்தை, 'டக் என் கோ ரீலோட்' வழியாக, 150 ரிங்கிட் விலைக்கு விற்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து லட்சம் ரிங்கிட் அல்லது அதிகபட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233(2)(a)-இன் கீழ், அவர்மீது வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)