Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சவால்கள் நிறைந்திருந்தாலும் செய்தியில் துல்லியக்கூறு முன்னுரிமையாக வேண்டும்

07/05/2026 04:04 PM

ஜாலான் துன் ரசாக், 07 மே (பெர்னாமா) --  தற்போதைய சமூக ஊடக யுகத்தில் செய்திகளை விரைவாக வெளியிட வேண்டும் என்ற அழுத்தம் செய்தியாளர்களுக்கு இருந்தாலும், வெளியிடப்படும் செய்தியில் துல்லியக் கூறு முன்னுரிமையாகத் தொடரப்பட வேண்டும்.

இலக்கவியல் தளங்களில் வேகமான தகவல்கள் பயன்பாடு செய்தி நிறுவனங்களின் செயல்பாடுகளை மாற்றியமைத்துள்ளன.

எனவே, தற்போது இணையத்தில் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஊடக நிறுவனங்கள் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

"ஊடகத் துறையில் உள்ள எங்கள் நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள், சில நேரங்களில் 50 நிமிடங்கள், 10 நிமிடங்கள் அல்லது 5 நிமிடங்கள் தாமதமாக செய்திகள் வந்தால், சமூக ஊடகங்களில் நமது செய்திக்கான பகிர்வு (reach) வித்தியாசமாக இருக்கலாம் என்றனர். ஆகவே, அந்தச் சவாலை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில், துல்லியம் என்பது இன்னும் முக்கியமானது", என்றார் அவர்.

செய்திகளுக்காக சமூக ஊடகங்களை அதிகளவில் சார்ந்திருப்பது தவறான தகவல்கள் வேகமாகப் பகிரப்படும் அபாயத்தையும் அதிகரிப்பதை தியோ சுட்டிக்காட்டினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 2026 ஹவானா ஊடகக் கருத்தரங்கின் தொடக்க விழாவில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இலக்கவியல் யுகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ ஆகியவற்றில் ஊடகத் துறை நிலைத்திருப்பதில் உள்ள சவால்கள் குறித்து விவாதித்த இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், மக்கள் தொடர்பு ஆர்வலர்கள் மற்றும் அரசு, தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)