Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரானில் போர் விரைவில் முடிவுக்கு வரும் - டிரம்ப் கணிப்பு

07/05/2026 04:11 PM

அமெரிக்கா, 07 மே (பெர்னாமா) --  ஈரானில் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கணித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மற்றும் தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவர ஓர் ஒப்பந்தத்தை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர் நேற்று புதன்கிழமை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது. நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களும் ஒரு சமரசத்திற்கு வர மிகவும் விரும்புகிறார்கள். அனைத்தும் மிக விரைவாகச் சரியாகிவிடும். ஆனால், அப்படி இருந்தபோதிலும், சிலர் இதை ஒரு போர் என்று அழைப்பார்கள். நான் இதை ஓர் இராணுவ நடவடிக்கை என்று அழைக்கிறேன். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், அது அவ்வளவுதான். வெனிசுலாவில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும், அது ஒரு நாள் நிலைமை. இப்போது நாங்கள் வெனிசுலாவுடன் நன்றாகப் பழகுகிறோம், அது ஒரு நாள் வெற்றி. ஈரானிலும் நாங்கள் சரிசமமாக, உண்மையில் சரிசமமாகவே சிறப்பாகச் செயல்படுகிறோம். இங்கு நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது, ​​நாங்கள் இதை ஒரு மிக மிக முக்கியமான காரணத்திற்காகச் செய்கிறோம். அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது", என்றார் அவர்.

தனது அணுசக்தித் திட்டத்தை நிறுத்திவைப்பதோடு, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளைத் தீர்க்காமல் போரை முறையாக முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்க சமாதானத் திட்டம் ஒன்றை ஆய்வு செய்து வருவதாக ஈரான் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மோதலை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவரும் இரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த உடன்பாடு நெருங்கிவிட்டதாக பாகிஸ்தானின் மத்தியஸ்த வட்டாரம் ஒன்றும், பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த மற்றொரு நபரும் தெரிவித்துள்ளனர்.

போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பினரும் ஓர் உடன்பாட்டிற்கு இவ்வளவு நெருக்கமாக இணங்கியிருப்பது இதுவே முதல் முறை எனத் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அடுத்த 48 மணி நேரத்தில் பல முக்கிய அம்சங்கள் குறித்து ஈரானிடமிருந்து பதில்களை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஊடகமான Axios செய்தி வெளியிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)