ஜோகூர், 07 மே (பெர்னாமா) -- ஜோகூர் மாநில சட்டமன்றம், இன்று கலைக்கப்படும் என்று வெளியாகியுள்ள வதந்தியை, அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஸி மறுத்துள்ளார்.
தற்போது தேர்தல் விவகாரத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, மாநில மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
''சபாநாயகர், இன்று இந்த அவையில் ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படாது என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன். எனவே, நிதானமாக இருங்கள். மாண்புமிகு உறுப்பினர்கள், மாநில பெருந்திட்டத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்பதே என் ஆலோசனை. மக்களுக்கும் ஜோகூர் மக்களுக்கும் சேவை செய்யும் பணியைத் தொடருங்கள்,'' என்றார் அவர்.
இன்று, ஜோகூர் சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத்தின் நிறைவு கூட்டத்தில், அவர் அதனை கூறினார்.
அதகரித்து வரும் அரசியல் நெருக்கடியின் காரணத்தினால் மாநில தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் அதனை தெளிவுப்படுத்த கடமைப்பட்டுள்ளதாக ஒன் ஹபிஸ் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)