Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

2026 சீனா விவேக தொழில்துறை வர்த்தகக் கண்காட்சி; சீனப் பங்காளிகளுடன் இணைக்கும் ஒரு முக்கியத் தளம்

15/05/2026 07:55 PM

கோலாலம்பூர், 15 மே (பெர்னாமா) --  2026 சீனா விவேக தொழில்துறை வர்த்தகக் கண்காட்சி உள்ளூர் நிறுவனங்களைச் சீனப் பங்காளிகளுடன் இணைக்கும் ஒரு முக்கியத் தளமாகச் செயல்படுகிறது.

இது இரு தரப்பினரும் தங்கள் வணிக வலையமைப்புகளை விரிவுபடுத்தவும், புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும், விவேக தொழில்நுட்பத் துறையில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லவும் உதவுவதாக மலேசியாவில் உள்ள சீன தொழில்முனைவோர் சங்கம், பி.யூ.சி.எம் தலைவர் டத்தோ கீத் லீ தெரிவித்தார்.

இவ்வாண்டு கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களின் வெற்றிகளைக் காட்டும் 'மலேசியா-சீனா விவேக தொழில்நுட்ப ஒத்துழைப்பு சாதனைகள் மண்டலம்' இடம்பெறுவதாக அவர் கூறினார்.

''நான் சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பி.ஐ தரவு மையத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இது சி.எஸ். ஓங்கின் குடும்பத்திற்குச் சொந்தமானது என்று நினைக்கிறேன். சைபர்ஜெயாவில் உள்ள இந்த இலக்கவியல் மையம், எனது உதவித் தலைவரின் நிறுவனமான இன்ஸ்பயர் டெலிகம்யூனிகேஷன்சால் கட்டப்பட்டது. அதே சமயம், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றொரு உதவித் தலைவரான டஹுவா டெக்னாலஜி மலேசியாவைச் சேர்ந்தவை. அதாவது, இந்தத் தரவு மையத்தின் மொத்த மதிப்பு 50 கோடி ரிங்கிட்டிற்கும் மேல் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது'', என்றார் அவர்.

இன்று நடைபெற்ற 2026 சீனா விவேக தொழில் வர்த்தகக் கண்காட்சியில் ஆற்றிய தனது உரையின்போது டத்தோ கீத் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, இரு நாடுகளின் நிறுவனங்களும் ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக்கொள்ளவும், தங்களின் பரஸ்பர பலங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், மக்களுக்கு உறுதியான பலன்களை வழங்கவும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங் தமது உரையில் தெரிவித்தார்.

''இக்கண்காட்சி பெரும் வெற்றி பெறட்டும். மேலும், மலேசியா-சீனா நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து செழித்து, இரு நாடுகளுக்கும் ஒட்டுமொத்த ஆசியான் வட்டாரத்திற்கும் பகிரப்பட்ட செழிப்பைக் கொண்டுவரட்டும்'', என்று தியோ நீ சிங் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கம், இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் மலேசியாவுடனான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், கூட்டு ஆராய்ச்சி, மக்கள் பரிமாற்றங்கள், தொழில்துறை ஒத்துழைப்பை ஆகியவற்றை வலுப்படுத்தவும் சீனா தயாராக உள்ளதாக மலேசியாவிற்கான சீனாவின் தூதர் ஓயாங் யுஜிங் தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குப் புத்தாக்கச் சாதனைகள் சிறப்பாகப் பயன்படுவதையும், வட்டார செழிப்பு, நிலைத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சிக்குப் பங்களிப்பதையும் உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)