பத்து பஹாட், மே 08 (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை, கவனக் குறைவாக வேனை ஓட்டிச் சென்று சிறுமிக்கு மரணம் விளைவித்ததாக சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டை, அதன் ஓட்டுநர், இன்று ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினார்.
மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் தம் மீதான குற்றஞ்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், நோர்டின் இத்தின் எனும் அவ்வாடவர் அதனை மறுத்தார்.
மே 5-ஆம் தேதி மதியம் சுமார் 12.30-க்கு, ஜோகூர் பத்து பஹாட், பாரிட் சூலோங்கில் உள்ள செரி மைமோன் தேசியப் பள்ளிக்கு முன்புறம் கவனக் குறைவாக வேனை ஓட்டிச் சென்று, சாலையைக் கடந்த 8 வயது நூர் அய்னி உமைரா முஹ்மட் ஃபாரிஸ் எனும் சிறுமிக்கு மரணம் விளைவித்ததாக நோர்டின் இத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41 உட்பிரிவு-(1) இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உட்பட அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
வழக்கை செவிமடுத்த நீதிமன்றம், மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் 5,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் அவரை விடுவிக்க அனுமதி அளித்தது.
அதோடு, நோர்டின் இத்தினின் வாகன ஓட்டுநர் உரிமம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து தடை செய்யப்பட்டதுடன், ஆவணங்களைச் சமர்ப்பிக்க வழக்கின் மறுசெவிமடுப்பை ஜூன் 25-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)