Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தமிழக ஆளுநருக்கு எதிராக வலுக்கும் ஆட்சேபக் குரல்

08/05/2026 06:39 PM

சென்னை, மே 08 (பெர்னாமா) -- 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், தவெக தலைவர் விஜய் முதலில் ஆட்சி அமைக்கட்டும் பிறகு பெரும்பான்மை நிரூபிக்கட்டும் என்ற வாதமே தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றது.

ஆனால், தவெக கட்சிக்கு தேவையான பெரும்பான்மை, அதாவது 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, ஆட்சியமைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு ஆளுநர் உறுதியாக இருக்கின்றார்.

இதனால், இந்திய அரசியல் ரீதியில் ஆளுநருக்கு எதிரான குரலும் வலுக்கிறது.

தனிப்பெரும் கட்சியாக தவெக 108 இடங்களில் வென்றுவிட்ட போதும், தேவையான பெரும்பான்மை எண்ணிக்கைகான ஆதரவு சற்றுக் குறைவாக உள்ளது.

தற்போதைய சூழலில் காங்கிரஸ்சின் ஆதரவுடன் தவெக 113 பேருக்கான எண்ணிக்கையை மட்டுமே கொண்டிருப்பதால், ஆட்சி அமைக்க 118 பேரின் ஆதரவு தேவை என்று ஆளுநர் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய களம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என அரசியல் தலைவர்கள் பலர் வலியுறுத்தி ஆளுநருக்கு எதிராக விமர்சித்தும் வருகின்றனர்.

தவெக ஆட்சி அமைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றது.

சில எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள், ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

மேலும், அரசியலமைப்புப்படி நிலையான அரசு அமைவதை உறுதி செய்வது ஆளுநரின் கடமை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதோடு, திராவிட முன்னேற்றக் கழகம் திமுக, மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிமுக என இரண்டும் சேர்ந்து அரசியல் சந்திப்புக்களை உருவாகியுள்ளன.

இதில் கூட்டணி அரசு அமையுமா? அல்லது தவெக ஆட்சி அமைக்குமா? என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

இதனிடையே, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றி அடைந்த மாணவர்களுக்கு தமது x தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள விஜய், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம் மீண்டும் முயற்சி செய்யுங்கள் எனவும் வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)