சென்னை, 13 மே (பெர்னாமா) -- ஆளுநரின் உத்தரவுக்கு ஏற்ப, இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகம், தவெக அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
இதன் வழி, தவெக அரசாங்கத்திற்கான பெருபான்மையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நிரூபித்துள்ளார்.
தவெக தலைமையிலான அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தவெக அரசாங்கம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்கட்சியான திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதனிடையே, தமது தலைமைத்துவத்திற்கு ஆதவரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.
இறுதியாக மீண்டும் உரையாற்றிய விஜய் தவெகவிற்கு நூலிழையில் தனிப்பெரும்பான்மை கொஞ்சம் தள்ளிப்போய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், "எந்த அணியும் இல்லாமல் தனி அணியாக களம் கண்டோம். 1967, 1977 போல சாமானியர்களின் ஆட்சியை அமைப்போம் என மக்களிடம் கூறினோம். கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் 34.92 சதவிகிதம் மற்றும் 1.72 கோடி வாக்குகளுடன் தவெகவை தனிப்பெரும் கட்சியாக மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த அரசை யாரும் சிறுபான்மை அரசு என நினைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. சிறுபான்மை மக்களின் உரிமையை நிலைநாட்டும் அரசு இது." என்றார்.
"இது எல்லோருக்குமான அரசாக இருக்கும், எந்த பாகுபாடும் இருக்காது. இதையெல்லாம் போகப் போக புரிந்து கொள்வார்கள். மக்கள் நலன் முக்கியம் என்பதே எங்களின் நிலைப்பாடு." என்று விஜய் பேசினார்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்றக் கூட்டம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)