Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் மாநிலத் தேர்தல் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு

02/06/2026 05:06 PM

கோத்தா திங்கி, 02 ஜூன் (பெர்னாமா) -- மாநிலத்தின் கால அட்டவணை ஆண்டு முழுவதும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் என்பதால், ஜோகூர் மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கருதப்படுகிறது.

ஜோகூரில் தேர்தல் அட்டவணையைத் திட்டமிடும்போது, ​​வானிலை கட்டுப்பாடுகளையும் பண்டிகைக் காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

''இப்போது ஜோகூரில் இந்த ஆண்டு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன. நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், கோத்தா திங்கியில் மழை பெய்யும். நிச்சயமாக அது (மாநிலத் தேர்தல்) முடியாது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்,'' என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை, கோத்தா திங்கியில் நடைபெற்ற, வாடகைக் கார் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஹமட் காலிட் அவ்வாறு கூறினார்.

மாநில அரசாங்கம் தற்போதைய காலகட்டத்தை சிறந்ததாகக் கருதினால், பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க மக்களுக்கு முழுமையான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாக சேவையாற்றியதுடன் தனிச்சிறப்புடன் விளங்கியதாகவும், தேர்தல் காலத்தைப் பொருட்படுத்தாமல் அம்னோ எப்போதும் மக்களின் நலனில் கவனம் செலுத்தி வருவதாகவும் முஹமட் காலிட் விவரித்தார்.

மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி நேற்று அறிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)