இந்தியா, 14 ஜூன் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் நெருக்கடியை ஏற்படுத்துவதால், உரத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளின் காரணமாக இந்தியாவில் விவசாயத் துறை அதிகரித்து வரும் செலவினங்களை எதிர்கொண்டு வருகிறது.
அடிப்படை உரங்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக இந்திய விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இந்த நெருக்கடியைக் கையாள சில வட்டாரங்களில் உள்ளூர் விவசாய அதிகாரிகள் பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
விநியோகச் சங்கிலி இடையூறுகள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்திக்கான இந்தியாவின் மூலப்பொருள் இறக்குமதியைப் பாதித்துள்ளதோடு, கலப்பு உரங்களின் விலையையும் உயரச் செய்துள்ளது.
''விவசாயத் துறை யூரியா மற்றும் டயமோனியம் பாஸ்பேட் விநியோகத்தில் தடைபட்டுள்ளது. முன்பு, எங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த இரண்டு வகையான உரங்களும் 10 முதல் 20 மூட்டைகள் வரை கிடைத்து வந்தன. தற்போது, அந்த ஒதுக்கீடு ஒன்று அல்லது இரண்டு மூட்டைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயக் கூட்டுறவு சங்கங்களும் தங்களிடம் யூரியா தீர்ந்துவிட்டதாகக் கூறுகின்றன,'' என்று விவசாயியான ஜக்டீப் சிங் தெரிவித்தார்.
''மத்திய கிழக்கு மோதல் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன் விளைவாக, எங்கள் வட்டாரத்தில் போக்குவரத்துச் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இது டிராக்டர்கள் போன்ற விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான செலவையும், தொழிலாளர் செலவுகளையும் மேலும் உயர்த்துகிறது,'' என்றார் விவசாயப்பொருள் உற்பத்தி சந்தைக் குழுவின் துணைத் தலைவர் (லாசூர்), அனில் ராஜாராம் சவான்.
அதேவேளளையில், உரத் தட்டுப்பாடு பயிர் விளைச்சலைக் குறைக்கும். உற்பத்தி குறைந்தவுடன், சந்தையில் தானியங்களின் அளவும் குறையும். விநியோகத்தில் ஏற்படும் இறுக்கம் தானிய விலைகளை உயர்த்தக்கூடும். மேலும், அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளும் விலைகளை மேலும் உயர்த்தி, சாதாரண மக்களை ஒரு கடினமான சூழ்நிலைக்குத் தள்ளும் என்று உள்ளூர் தானியச் சந்தையின் இயக்குனர் தீபக் சாண்ட்லி கூறினார்.
இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ளூர் விவசாயிகளின் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக விவசாயப் பொருள்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)