Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஜி-7 தலைவர்கள் பிரான்சில் கூடினர்; அமெரிக்க - ஈரான் ஒப்பந்தம் கவனத்தில் உள்ளது

16/06/2026 06:41 PM

பிரான்ஸ், 16 ஜூன் (பெர்னாமா) -- ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இணைந்து பிரான்சில் மூன்று நாள்களுக்கு நடைபெறவிருக்கும் உச்சநிலை மாநாட்டை திங்கட்கிழமை தொடங்கினர். 

இம்மாநாட்டில், அமெரிக்கா - ஈரான் உடனான தற்காலிக  ஒப்பந்தம், மத்திய கிழக்கில் பதற்றங்களைத் தணித்து, பரவலான வட்டார மோதல்களைத் தடுக்க உதவுமா என்பது குறித்த தொடக்கக்கட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் 80-ஆவது பிறந்தநாளான ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. 

ஹோர்முஸ் நீரிணையை நீண்ட கால அடிப்படையில் மீண்டும் திறப்பது குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று, இவ்வாண்டு உச்சநிலை மாநாட்டின் தலைவரான பிரான்ஸ் அதிபர் இம்மெனுவல் மெக்ரோன் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும் நேரத்தில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், உக்ரேன் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளில் ஜி-7 நாடுகளின் ஒருமித்த நிலைப்பாட்டை, இந்த உச்சநிலை மாநாட்டால் முன்னெடுக்க முடியுமா என்பதும் தீர்மானிக்கப்படும்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியப் பின்னர், ஜி7 தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல் கூட்டம் இதுவாகும்.

ஈரான் போர் மற்றும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து, தவறான புரிதல்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன..

ஐரோப்பியத் தலைவர்கள் கீவ்விற்குத் தொடர்ந்து வலுவான ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், டிரம்ப் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாண்டு வருகின்றார்.

இதனிடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் விமர்சித்தது குறித்து டிரம்ப் முன்னதாகத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், இம்மாநாட்டின் முடிவில், கூட்டு அறிக்கை ஒன்றை அதில் கலந்து கொள்ளும் தலைவர்கள் வெளியிடமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]