அரசியல்

கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைக்காகவே மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது

14/09/2021 05:26 PM

கோலாலம்பூர், 14 செப்டம்பர் (பெர்னாமா)-- கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்த கேள்விகளுடன் 14ஆவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான மக்களவைக் கூட்டத்தொடரின் முதல் நாள் தொடங்கியது.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஏறக்குறைய 100 கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைக்காகவே மக்களவை உறுப்பினர்கள் அங்கு நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

''கட்டிடத்தினுள் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதால், எந்தவொரு தரப்பினரையும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படாததை உறுதிசெய்து கொள்ளுமாறு போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது,'' என்றார் அவர்.

ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர்  இது குறித்து கேள்வி எழுப்பிய வேளையில், எதிர்கட்சி தலைவராக தாம் நாடாளுமன்ற கட்டிடத்தினுள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டது குறித்தும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து விவரிக்கையில் கொவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் எஸ்.ஓ.பி-ஐ மீறி கூட்டம் கூடியது சட்டத்திற்கு புறம்பானது என்பதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் குறிப்பிட்டார்.

எனினும், சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி அபராதத் தொகை குறைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)