புத்ராஜெயா, 03 ஜூலை (பெர்னாமா) -- ஃபைபர் (fiber) இணைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பில் சுமார் ஏழு கோடியே 50 லட்சம் ரிங்கிட் நிதியை உட்படுத்திய கள்ளப்பண பறிமாற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் டத்தோ அந்தஸ்து கொண்ட நிறுவன ஒன்றின் இயக்குநரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.
இன்று தொடங்கி வரும் ஜூலை ஆறாம் தேதி வரை நான்கு நாள்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவை மஜிஸ்திரேட் இர்சா சுலைக்கா ரொஹானுடின் இன்று காலை புத்ராஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிறப்பித்தார்.
சுமார் 50 வயதுடைய அவ்வாடவர் 2012-ஆம் ஆண்டில் அக்குற்றத்தைப் புரிந்ததாக எஸ்.பி.ஆர்.எம் கூறியது.
40 கோடி ரிங்கிட்டை உட்படுத்திய கடன் நிதிக்கு ஒப்புதல் அவ்வாடவர் அளித்துள்ளதாக குற்றம் பதிவாகிய நிலையில், ஏழு கோடியே 50 லட்சம் ரிங்கிட்டை தமக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கியதாக தொடக்கக்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று, எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்திற்கு மாலை மணி நான்கு அளவில் வாக்குமூலம் அளிக்க வந்த அவ்வாடவர் கைது செய்யப்பட்டார்.
2001-ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்படும் வருமானச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]