மலேசியா - சிங்கப்பூர் எல்லைத் திறப்பு; அனைத்து தரை பொதுப்போக்குவரத்துகளுக்கும் அனுமதி

28/03/2022 06:18 PM

கோலாலம்பூர், 28 மார்ச் (பெர்னாமா) -- வரும் ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதி திறக்கப்படுவதைத் தொடர்ந்து அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் எல்லையைக் கடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் எல்லைப் பகுதி மீண்டும் திறக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, இந்த அனுமதி வழங்கப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.

இதன் வழி அனைத்து நிலை பயணிகள் மற்றும் அனைத்து வகையான தரைப் போக்குவரத்துகளுக்கு எல்லையைக் கடக்க முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து பிரிவில், பேருந்து, விரைவுப் பேருந்து, சுற்றுலா பேருந்து, தொழிலாளர் பேருந்து, டாக்சி ஆகியவை உட்படுத்தப்படும்.

இதன்பொருட்டு, மலேசியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள அனைத்து பொதுப் போக்குவரத்து நடத்துநர்களும், தங்களின் வாகன சேவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டாக்டர் வீ கா சியோங் நினைவுறுத்தினார்.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருநாட்டினரும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கை ஏதுமின்றி தரை வழியிலான எல்லைப் பகுதிகளைக் கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் வீ நினைவுறுத்தினார்.

அதேவேளையில் பயணத்திற்கு முன்னரும், பின்னரும் கொவிட் 19 பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்று அவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.

--  பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)