சிறப்புச் செய்தி

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு திரும்பும் மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பரிந்துரை

30/10/2022 08:33 PM

கோலாலம்பூர், 30 அக்டோபர் (பெர்னாமா) -- 15ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக உயர்கல்விக்கழக மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும், சொந்த ஊர்களுக்குத் திரும்புவதில் அவர்கள் பல சவால்களை எதிர்நோக்க நேரிடும்.

எனவே, மாணவர்கள் பயணம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் உட்பட அரசாங்கம், அரசு சாரா அமைப்புகள் முன் வர வேண்டும் என்று தேர்தல் சீர்திருத்தக் குழுவின் முன்னாள் உறுப்பினர் முனைவர் ஜி. மணிமாறன் ஆலோசனை தெரிவித்தார்.

சுமார் 15 லட்சம் உயர்கல்விக் கழக மாணவர்கள் தங்களின் சொந்து ஊர்களுக்குத் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டும் சாத்தியம் உள்ளது.

குறிப்பாக, பேருந்து மற்றும் விமானங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று முனைவர் ஜி. மணிமாறன் சுட்டிக் காட்டினார்.

எனவே, போக்குவரத்து சேவை நிறுவனங்கள் இந்தக் காலக்கட்டத்தில் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மாணவர்களின் பயணங்களை எளிமையாக்குவதற்கு தகுந்த வசதிகளை ஏற்பாடு செய்துத் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

''சி.எஸ்.ஆர் மூலம் அவர்களுக்கு பல வசதிகளைச் செய்துத் தர வேண்டும். இப்போது லாபத்தை கண்ணோட்டமாக பார்க்கக்கூடாது. ஜனநாயகத்தை செயல்வடிவம் செய்வதற்கு இது ஒரு நல்ல தருணம். இதற்கு அனைத்து தரப்பினரும் கைகொடுக்க வேண்டும்,'' என்றார் அவர்.

அதோடு, மாணவர்களின் வசதிக்காக உயர்கல்விக் கூடங்களிலேயே வாக்களிக்கும் புதிய அணுகுமுறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்றப் பரிந்துரையையும் அவர் முன் வைத்தார்.

இதனிடையே, உயர்க்கல்விக் கூடங்களில் பயிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதாவது UNDI 18 முறையில் வாக்களிக்கும் மாணவர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

''தொலைக்காட்சி, நாளிதழ்களில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் அடிப்படை நோக்க என்ன, மற்றும் வாக்களிப்புகள் குறித்து கூடுதலாக தெளிவுப்படுத்த வேண்டும்,'' என்றார் மணிமாறன்.

கடந்த மூன்று மாதங்களில் 18 லிருந்து 20 வயதிற்குட்பட்ட வாக்காளர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வு இருப்பதை காண முடிவதாக கூறிய மணிமாறன், அதனை தக்க வைத்துக் கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அதோடு, வாக்களிப்பதற்கு மட்டுமல்லாது போட்டியிடுவதற்கான தகுதியும் அவர்களுக்கு இருப்பதை மணிமாறன் இவ்வாறு தெளிவுப்படுத்தினார்.

''விழிப்புணர்வை இரு வகையாக பார்க்க வேண்டும். ஒன்று வாக்களிப்பது. இரண்டாவது போட்டியிடுவது. இவை இரண்டிற்கு விழிப்புணர்வு தேவைப்படுகின்றது,'' என்றார் அவர்.

UNDI 18 மூலம் நாட்டின் அரசியல் மீது இளைஞர்களின் கவனமும் ஈடுபாடும் அதிகரிக்கும் என்றுக் கூறிய மணிமாறன், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் சிறந்த அரசாங்கத்தை தேர்வு செய்ய, தவறாது தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)