பொது

முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர், அப்துல் அசிஸ் இன்று விடுதலை

09/12/2022 06:03 PM

கோலாலம்பூர், 09 டிசம்பர் (பெர்னாமா) -- பேராக்கிலும் கெடாவிலும் சாலை கட்டுமானத் திட்டம் தொடர்பில் கையூட்டு பெற்ற மூன்று குற்றச்சாட்டுகளிலும் கள்ளப்பண பரிமாற்றம் செய்த ஆறு குற்றச்சாட்டுகளிலும் இருந்து முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் இன்று விடுவிக்கப்பட்டார்.

அக்குற்றச்சாட்டுகளில் இருந்து அப்துல் அசிஸ் உடனடியாக விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர், அமீர் ஹம்சா அர்ஷாட்  செய்த மனுவிற்கு அனுமதி வழங்கிய கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் டத்தோ அஸ்ஹார் அப்துல் ஹாமிட், அவரை விடுதலைச் செய்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்,எஸ்.பி.ஆர்.எம்மின் விசாரணை முடிந்து, கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அனைத்தும்  அப்துல் அசிஸிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, தமது தரப்பிற்கு அக்டோபர் 26-ஆம் தேதியிடப்பட்ட கடிதம் ஒன்று பெறப்பட்டதாக அமீர் ஹம்சா நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் முதலாம் தேதி எதிர் தரப்பினர் செய்த மனுவிற்குத் தமது தரப்பு ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நிக் ஹஸ்லினி ஹஷிம் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அப்துல் அசிஸ் முன்வைத்த முறையீட்டை அரசு தரப்பு பரிசீலிப்பதாகவும், அதற்குத் தீவிர விசாரணை தேவைப்படுவதாகவும் காரணம் கூறி, குற்றவியல் நடைமுறைச் சட்டம். செக்‌ஷன் 254 உட்பிரிவு 3-ரின் கீழ் அவரை விடுதலைச் செய்யாமல் விடுவிக்குமாறு செஷன்ஸ் நீதிமன்றம் செப்டம்பர் 23-ஆம் தேதி உத்தரவிட்டது.

55 வயதான அப்துல் அசிஸ், பேராக்கிலும் கெடாவிலும் சாலை திட்டம் தொடர்பில் 52 லட்சம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளும் 9 லட்சத்து 72 ஆயிரத்து 414 ரிங்கிட் தொகையைக் கள்ளப்பண பரிமாற்றம் செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியிருந்தார்.

2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் கோலாலம்பூரில் உள்ள ஐந்து வங்கிகளில் அவர் அக்குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)