கோலாலம்பூர், 06 பிப்ரவரி (பெர்னாமா) -- சீனப் புத்தாண்டை முன்னிட்டு உள்ளூர் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய தாய்லாந்து மற்றும் பிரேசிலில் இருந்து பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய கால்நடை சேவை துறை, டி.வி.எஸ் (DVS) ஒப்புதல் அளித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான இறைச்சி கையிருப்பு குறித்து அரசாங்கம் எப்போதும் விழிப்புடன் இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தெரிவித்திருக்கிறது.
பன்றி இறைச்சியை இறக்குமதி செய்வதற்காக, தமது தரப்பு அங்கீகரித்த இறைச்சிக் கூடங்களின் பட்டியலைப் பெற உள்ளூர் இறக்குமதியாளர்கள் அதிகாரப்பூர்வ டி.வி.எஸ் அகப்பக்கத்தை நாடலாம் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு கூறியுள்ளது.
பிரேசிலின் மூன்று இறைச்சிக் கூடங்களுக்கும் தாய்லாந்தின் நான்கு இறைச்சிக் கூடங்களுக்கும் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
பன்றி இறைச்சி இறக்குமதி, உணவுப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் கால்நடை சுகாதார செயல்பாட்டு தர விதிமுறை ஆகியவற்றுக்கு இணங்க வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உணவு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கும், நாட்டில் நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த விதிமுறைகள் அமலில் உள்ளன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]