பொது

கோழி முட்டைகளை இறக்குமதி செய்வதால் மக்களுக்குப் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படக் கூடாது

09/12/2022 05:54 PM

ஜார்ஜ்டவுன், 09 டிசம்பர் (பெர்னாமா) -- நாட்டில் கோழி முட்டைகளின் விலை அதிகரித்து வரும் வேளையில், சந்தைகளில் அதன் கையிருப்பும் குறைந்து கொண்டே வருகிறது.

முட்டையின் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கு, வெளி தரப்பினரிடமிருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தாலும் அது மக்களுக்கு பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

''முட்டையை உண்பதற்கான பிரச்னையை சமாளிப்பதற்கு அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யப்போவதாக அறிவித்திருக்கின்றது. முன்பு மலேசியாவிலிருந்துதான் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது மற்ற நாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முட்டை இறக்குமதி செய்யப்பட்டாலும் அதன் விலை அதிகரிக்கக் கூடாது என்பதே எங்களது வேண்டுகோள்,'' என்றார் சுப்பாராவ்.

பெரும்பாலான கடைகளில் A மற்றும் B ரக கோழி முட்டைகளின் விலை அரசாங்கம் நிர்ணயித்த விலையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதை விவசாயம், உணவு உத்தரவாத அமைச்சு உறுதிப்படுத்தியிருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு & கல்வி பிரிவு அதிகாரி சுப்பாராவ் தெரிவித்தார்.

இதனிடையே, கோழி பற்றாக்குறையினால் கோழி முட்டைகளின் கையிருப்பு குறைந்து வருவதாக அவர் கூறினார்.

இதன் காரணமாகவே, சில கடைகளில் முட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.

''சில கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முட்டையிடும் கோழிகளை முட்டையிடுவதற்கு முன்பதாகவே வெட்டி வியாபாரம் செய்வதாக கூறப்படுகின்றது. இதற்கு காரணம், மலேசியர்கள் அதிகமாக கோழியை உட்கொள்கின்றனர். இதனால், முட்டைக்கும் பற்றாக்குறை ஏற்படுகின்றது,'' என்றார் சுப்பாராவ்.

அதோடு, முட்டை விலையின் அதிகரிப்பினால் உணவகங்களில் முட்டை பயன்படுத்தப்பட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் என்பதையும் சுப்பாராவ் மறுக்கவில்லை.

உணவுப் பொருட்களை வாங்குவதற்கு முன்னர், அதன் விலைகளை உறுதிப்படுத்திக் கொள்வது சிறப்பு என்று அவர் தெரிவித்தார்.

முட்டை விலை அதிகரிப்பு மற்றும் அதன் கையிருப்பு பிரச்சனையை தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதோடு கோழி பண்ணைகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)