பொது

சீராய்வு மனுவில் தோல்வி கண்டனர் பூங் மொக்தார் தம்பதியர்

09/12/2022 06:04 PM

கோலாலம்பூர், 09 டிசம்பர் (பெர்னாமா) -- பப்ளிக் முச்சுவல் நிறுவனத்தில் 15 கோடி ரிங்கிட் முதலீடு சம்பந்தப்பட்ட 28 லட்சம் ரிங்கிட் ஊழல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் கினாபாத்தாங்கன் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஶ்ரீ பூங் முக்தார் ராடினும் அவரின் மனைவி டத்தின்ஶ்ரீ சிசி எசாத்தி அப்துல் சமாட் தம்பதியர், தங்களை தற்காத்து வாதிடும்படி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த உத்தரவிற்கு எதிராக செய்த சீராய்வு மனுவில் தோல்வி கண்டுள்ளனர்.

அத்தம்பதியரின் மனுவுக்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் லாவ் சின் ஹோவ் செய்துகொண்ட ஆட்சேபனையைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் டத்தோ அஸ்டார் ஹமிட் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

முன்னதாக, அத்தம்பதியர் தரப்பு விண்ணப்பத்தை அறிவிப்பு மனுவின் மூலம் தாக்கல் செய்திருக்கக் கூடாது என்ற அடிப்படையில் லாவ் தமது ஆட்சேபனையைத் தெரிவித்தார்.

போங் மொக்தாரும் சிசி எசாத்தியும் அறிவிப்பு மனுவை தாக்கல் செய்யும் முறை தவறானது மட்டுமின்றி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் செக்‌ஷன் 325 மற்றும் 326-உடன் வாசிக்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு நீதிமன்றச் சட்டம், செக்‌ஷன் 35 மற்றும் 36-க்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்றைய தீர்ப்பை எதிர்த்து அத்தம்பதியினர் மேல்முறையீடு செய்யவிருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் டத்தோ கே. குமரேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெல்ஃகிரா நிறுவனத்தின் முதலீடு தொடர்பில், 28 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கையூட்டுத் தொகையைப் பெற்றதாக, 2019-ஆம் ஆண்டு மே மூன்றாம் தேதி போங் மொதார் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

போங் மொக்தாரின் மனைவி, சிசி தன் கணவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் உடந்தையாக இருந்ததால் அவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

2015-ஆம் ஆண்டு ஜூன் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில், பெல்ஃகிரா நிறுவனத்தில் நிர்வாகி அல்லாத தலைவராக பொறுப்பேற்றிருந்த மொக்தார் தமது மனைவி மூலமாக, பப்ளிக் நிறுவனத்தில் பெல்கிரா 15 கோடி ரிங்கிட் முதலீடு செய்வதற்கான ஒப்புதலை, இரண்டாவது நிதியமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொடுத்ததற்காக அத்தொகையை கையூட்டாக பெற்றதாக நம்பப்படுகிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)