BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

'மெனு ரஹ்மா' திட்டத்திற்கு கைக்கொடுக்கும் உணவகச் சங்கங்கள்

03/02/2023 08:54 PM

கோலாலம்பூர், 03 பிப்ரவரி (பெர்னாமா) -- குறைந்த வருமானம் பெரும் மக்களின் வாழ்க்கை செலவினத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் மற்றொரு முயற்சி 'மெனு ரஹ்மா' எனப்படும் ஐந்து ரிங்கிட் சமசீர் உணவு. 

கார்போஹைட்ரேட், ஒரு புரத வகை, ஒரு நார்சத்து வகை மற்றும் குடிநீர் உள்ளடங்கிய உணவு இந்த 'மெனு ரஹ்மா'-வின் கீழ் விற்கப்படவுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ ஶ்ரீ சலாஹுடின் அயூப் அண்மையில் அறிவித்திருந்தார்.    

இப்புதிய திட்டத்தில் அரசாங்கத்திற்கு கைக்கொடுக்க பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கமும், பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கமும் முன்வந்துள்ளன. 

அரசாங்கம் தங்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும் நிலையில் தற்போது தாங்கள் செய்ய வேண்டிய கைமாறாகவே இதனை கருதுவதாக பிரிமாஸ் தலைவர் சுரேஷ் ஜெயபாலன் தெரிவித்தார். 

ஒரு சில உணவகங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டப் பின்னர் கூடிய விரைவில் நாடு தழுவிய அளவில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் இது அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

எனினும், இத்திட்டத்தில் இணைய எந்தவோர் உணவகமும் வற்புறுத்தப்படவில்லை என்பதை சுரேஷ் தெளிவுப்படுத்தினார். 

''யாருக்கெல்லாம் இதில் இணைந்து பணியாற்ற விருப்பமோ அவர்கள் வரவேற்கப்படுகின்றனர். யாரும் இதில் வற்புறுத்தப்படவில்லை. இதில் லாபம் கிடையாது. அரசாங்கத்திற்கான ஓர் உதவி மட்டுமே,'' என்றார் அவர். 

இத்திட்டத்தினால் லாபம் இல்லை என்றாலும் B40 பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் நோக்கத்துடனேயே தமது தரப்பு இதில் இணைந்துள்ளதாக அவர் விவரித்தார். 

எனினும், உணவகங்களுக்குச் சென்று இத்திட்டத்தின் கீழ் உணவை வாங்கும் மக்கள் B40 பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏன்பதை கண்டறிவது கடினம் என்பதையும் சுரேஷ் மறுக்கவில்லை. 

''அவர்களைத் தேடி நாம் செல்ல முடியாது. அது கடினம். யார் வந்து நாங்கள் B40 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னால் நாங்கள் கொடுத்தாக வேண்டும். உணவு கையிருப்பு இருக்கும் வரை நாங்கள் கொடுப்போம்,'' என்றார் அவர். 

இதனிடையே, இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான கால வரையறை குறித்து பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி தைப் கான் இவ்வாறு விவரித்தார். 

''இந்த உணவின் அசல் விலை 10-இல் இருந்து 11 ரிங்கிட் வரை விற்கப்படுகிறது. எனவே, லாபம் இல்லாத ஒரு திட்டம் இது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்,'' என்றார் அவர். 

உணவகங்களுக்கு செல்லும் மக்கள், ரஹ்மா உணவுத் திட்டத்தின் கீழ் உணவு உண்ணவிருப்பதை உரிமையாளரிடம் தெரிவித்து அதனை வாங்கி உண்ணலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தாலும், அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று வசதியுள்ள மக்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது.  

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]