பொது

ஆடவரை கொலை செய்ததாக ஐவர் மீது குற்றச்சாட்டு

27/02/2024 07:35 PM

பாங்கி, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த வாரம் செமினி-இல் உள்ள வீடமைப்பு பகுதி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகிய கார் ஓட்டுநரான ஆடவர் ஒருவரை கொலை செய்ததற்காக, உணவு அனுப்புநர்கள் ஐவர் இன்று பண்டார் பாரு பாங்கி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

மஜிஸ்திரேட் நுர்டியானா முஹமட் நவாவி முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை, புரிந்துக் கொண்டதாக அனைவரும் தலையசைத்தாலும் கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், அவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

இரசாயன, தடயவியல் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதற்காக, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பெரானாங், தாமான பெலாஙி செமினி 2-இல் பிப்ரவரி 20-ஆம் தேதி இரவு 9.54 மணிக்கு 41 வயதான ஷாரில் சாமாட்-ஐ கொலை செய்ததாக, 41 வயது முஹமட் யூரி ரனோஃப் முஹமட் பசூரி, 34 வயது அஸாருல் அசுவான் முஹமட் அசான், 22 வயது தெங்கு இஸ்ஹம் தெங்கு ஹமிட், 43 வயது மஹாசிர் நோர்டின் மற்றும் 40 வயது ஷம்சுல் கமால் அயோப் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302 மற்றும் செக்‌ஷன் 34-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை, குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம்.

மரணத் தண்டனை விதிக்கப்படாவிட்டால் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்க அச்சட்டம் வகைச் செய்கிறது.

ஆடவர் ஒருவரால் செலுத்தப்பட்ட புரோட்டோன் சாகா ரகக் கார் கவிழ்ந்து வேலியை மோதியப் பின்னர், கும்பல் ஒன்று அவ்வாடவரை காரிலிருந்து வெளியே இழுத்து, கட்டிப் போட்டு அவரை அடித்ததோடு, அவர் காரின் அருகில் சாலையிலேயே விட்டுச் சென்றதாக பிப்ரவரி 21-ஆம் தேதி பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)