உலகம்

இலங்கை: செப்டம்பர் 21 தேர்தல், ஆகஸ்ட் 15 வேட்புமனுத் தாக்கல்

26/07/2024 08:27 PM

கொழும்பு, 26 ஜூலை (பெர்னாமா) --  இலங்கையில், வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் வேளையில், அதற்கான வேட்புமனுத் தாக்கல், ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இலங்கை அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நிறைவடையவிருப்பதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

உலகில் பெரும்பான்மையான நாடுகள் பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டிருந்தாலும், இலங்கையில் அதிபர் ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. 

இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிக்க முடியும்.

ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். 

நியமிக்கப்படும் அதிபர் அரசின் தலைவராகவும், நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவராகவும், முப்படைகளின் தலைவராகவும் இருப்பார்.

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில், மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே நிறுத்தப்பட்டார். 

அந்தத் தேர்தலில் 52 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். 

இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். 

2022-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி, இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)