பொது

அந்நிய தொழிலாளர் தருவிப்புக்கு விதித்த கோட்டா முறைக்கானத் தடையை அகற்றுவீர்

27/02/2024 08:43 PM

கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- வரும் மார்ச் முதலாம் தேதியிலிருந்து சட்டவிரோதத் தொழிலாளர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை தொடங்குவதால், அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் கோட்டாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்றுமாறு பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தாயிப் கான் கூறினார்.

சட்டவிரோத தொழிலாளர்களை குடிநுழைவுத் துறை முகாமில் அடைத்து வைப்பதற்கு பதிலாக, அபராதம் விதித்து அவர்களை மீண்டும் தாயகத்திற்கு அனுப்பி வைப்பது சிறந்த முடிவாகவே கருதப்படுகிறது.

மன்னிப்பு திட்டத்தின் கீழ் அத்தொழிலாளர்கள் தங்களின் நாட்டிற்குத் திரும்பும் வேளையில், முதலாளிகள் புதிய தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக அமர்த்திக் கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

''முடித்திருத்தும் நிலையங்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள் ஆகியவற்றிற்கு நிறைய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்/ அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சிரமத்தை எதிர்நோக்க நேரிடுகின்றது. அன்வார் இதனை மீண்டும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் நம்புகின்றோம்,''என்றார் அவர்.

மேலும், ஆவணமற்ற அந்நியத் தொழிலாளர்களை மன்னிப்புத் திட்டத்தின் கீழ் அனுப்பி வைப்பது மிகை செலவுகளை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கை என்றாலும், இதனால் பல முதலாளிமார்கள் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சனையை எதிர்நோக்குவர் என்றும் ஜவஹர் அலி விவரித்தார்.

உணவகங்கள் மட்டுமின்றி சிறு, நடுத்தர வணிகங்கள், தோட்டத் தொழில்துறை, தயாரிப்புத் துறை ஆகிய துறைகளும் இதனால் பாதிப்பை எதிர்நோக்கக்கூடும்.

எனவே, அந்தந்தத் தொழில்துறைக்கு ஏற்ற அளவில் தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டால் தொழிலாளர்களின் பற்றாக்குறை குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், அனைத்து துறைகளையும் உட்படுத்தி ஒரு மத்திய நிர்வாக அமைப்பு முறையை உருவாக்குவதன் மூலம், அந்நியத் தொழிலாளர் தருவிப்பு நடவடிக்கையை முறைப்படுத்தலாம் என்றும் ஜவஹர் அலி ஆலோசனைக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502