உலகம்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது இந்தியாவின் முதன்மை எதிர்கட்சியான காங்கிரஸ்

06/04/2024 05:33 PM

புது டெல்லி, 06 ஏப்ரல் (பெர்னாமா) -- பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியிருக்கும் வேளையில், இந்தியாவின் முதன்மை எதிர்கட்சியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதில் பெண்கள், இளைஞர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ன.

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் ஆகியோர் வெளியிட்டனர்.

சமூக பொருளாதாரம், ‎நீட், கியூட் போன்ற தேர்வுகள், மாநில அரசுகளின் விருப்பத்திர்கு உரியது, குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு போன்ற அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

அந்நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி, இத்தேர்தல் அடிப்படையில் மிகவும் வித்தியாசமான ஒன்று என்றும் சாடியுள்ளார்.

''இந்தத் தேர்தல் அடிப்படையில் வேறுபட்ட தேர்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகம் இந்த அளவு ஆபத்தில் இருந்ததாக நான் நினைக்கவில்லை, அரசியலமைப்பு இன்று ஆபத்தில் உள்ளது,'' என்றார் அவர்.

இதனிடையே, அதே நிகழ்வில் உரையாற்றிய ப.சிதம்பரம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகம் மிகவும் பலவீனம் அடைந்திருப்பதால், அனைத்து தரப்பினருக்கும் நீதி என்ற அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

''சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் என்று நாங்கள் கூறியிருந்தோம், அது நடந்துள்ளது. நலிந்த பிரிவினரின் உரிமைகள் மற்றும் சலுகைகள் மறுக்கப்படும் என்று நாங்கள் கூறியிருந்தோம், அதுவும் நடந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று நாங்கள் கூறியிருந்தோம், அதுவும் நடந்துள்ளது. தவிர்க்க முடியாமல், கொடுங்கோன்மையை
நோக்கி நகர்வோம் என்று கூறியிருந்தோம்,'' என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சருமான சிதம்பரம் தலைமையிலான குழு தேர்தல் அறிக்கை தொடர்பில் நாடு முழுவதும் ஆலோசனை கேட்டறிந்து அதன் அடிப்படையில் காங்கிரஸ் அவ்வறிக்கையைத் தயாரித்தது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐந்தாண்டுகளுக்கு வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறப்பட்டுள்ளன.

இருப்பினும், மோடி இந்தியாவின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிட்டிருக்கிறார் என்றும், தமது தேர்தல் அறிக்கையில் பணக்காரர்களின் நலன்களுக்கே ஆதரவளித்திருக்கிறார் என்றும் காங்கிரஸ் சாடியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)